குஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை சிக்க வைக்காததால் பிரச்சினைகளை சந்தித்தேன்: முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் குற்றச்சாட்டு

புதுடெல்லி, குஜராத் கலவர சம்பவம் குறித்து மோடியிடம் 9 மணி நேரம் நடந்த விசாரணையில் அவர் ஒரு கப் டீ கூட குடிக்கவில்லை என்று, முன்னாள் புலனாய்வு அதிகாரி தனது புத்தகத்தில் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். தமிழக கேடரின் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆர்.கே.ராகவன், கடந்த 2002ம் ஆண்டு குஜராத் கலவரம் குறித்து உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட  எஸ்ஐடி-யின் (சிறப்பு புலனாய்வுக் குழு) தலைவராக நியமிக்கப்பட்டார்.  கடந்த 2008ம் ஆண்டின் தொடக்கத்தில் எஸ்ஐடி-யின் தலைவராக பொறுப்பேற்றார்.  ஏப்ரல் 30, 2017ம் ஆண்டு வரை ஒன்பது ஆண்டுகள் இப்பதவியை வகித்தார். இதற்கு முன்னதாக சிபிஐ அமைப்பின் தலைவராக இருந்தார். போபர்ஸ் ஊழல், 2000ம்  ஆண்டு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டியை நிர்ணயிக்கும் வழக்கு, தீவன மோசடி தொடர்பான வழக்குகளின் விசாரணை அதிகாரியாக இருந்தார்.

இந்நிலையில், ராகவன் தனது சுயசரிதை புத்தகத்தை ‘எ ரோட் வெல் டிராவல்ட்’ என்ற பெயரில் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தின் விபரங்கள் தற்போது வடமாநில ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த புத்தகத்தில், ‘குஜராத் கலவரம் நடந்த போது மாநில முதல்வராக நரேந்திர மோடி இருந்தார். அவர், காந்திநகரில் உள்ள எஸ்ஐடி அலுவலகத்திற்கு விசாரணைக்கு வர ஒப்புக்கொண்டார். அவரே ஒரு பாட்டில் தண்ணீரைக் கொண்டு வந்தார். அவரிடம், ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தினோம். அப்போது, அவர் ​​தொடர்ந்து அமைதியாக இருந்தார். சுமார் 100 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.

இந்த நேரத்தில் அவர் புலனாய்வு அதிகாரிகளிடம் இருந்து ஒரு கோப்பை தேநீர் கூட வாங்கிக் குடிக்கவில்லை. எஸ்ஐடி உறுப்பினர் அசோக் மல்ஹோத்ரா அவரிடம் குறும்புதனமாக விசாரணை நடத்தினார். அத்தனைக்கும் அமைதியாக பதில் அளித்ததாக மல்ஹோத்ரா பின்னர் என்னிடம் கூறினார். மதிய உணவுக்கு ஓய்வு எடுக்க விரும்புகிறீர்களா? என்று மல்ஹோத்ரா கேட்டபோது, ​​ஆரம்பத்தில் அதை நிராகரித்துவிட்டார். அவர் கொண்டு வந்த தண்ணீரைதான் குடித்தார்.

குஜராத் கலவரத்தில் மோடிக்குதொடர்பு இல்லை என்பதை விசாரணையில் அறிந்து கொண்டேன். 2002-ம் ஆண்டு பிப். 28-ம் தேதி நள்ளிரவு நடந்த கூட்டத்தில் இந்துக்களின் உணர்வுகளில் குறுக்கிட வேண்டாம் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு மோடி உத்தரவிட்டதாக போலீஸ் அதிகாரிசஞ்சீவ் பட் கூறியதில் முரண்பாடுகள் இருப்பதைக் கண்டேன். அவரது குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படவில்லை. கலவரத்தில் மோடிக்கு தொடர்பில்லை என்று நான் அறிக்கை அளித்தற்காக மோடியின் அரசியல் எதிரிகளால் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டேன். குற்றச்சாட்டில் மோடியை சிக்க வைக்காததால் நான் மோடிக்கு ஆதரவாக இருப்பதாக எனக்கு எதிராக பொய்யானபுகார்களை கூறி மனுக்களை அனுப்பினர். எஸ்ஐடி பிப்ரவரி 2012ல் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் மோடி மற்றும் 63 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் நிரூபிக்கவில்லை என்று தீர்ப்பு வந்தது. டெல்லியில் உயர் பதவிகளில் இருப்பவர்களால் புலனாய்வு அமைப்புகள் இலக்காகக் கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது (எவரது பெயரையும் குறிப்பிடவில்லை)’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: