×

வேளாண் சட்டங்களை அமல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடக்கோரிய மனு தள்ளுபடி :உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

புதுடெல்லி,:  வேளாண் சட்டத்தை உடனடியாக செயல்படுத்தக்கோரி அனைத்து மாநில அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க மறுத்து தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அதொடர்பான வழக்குகளை முடித்து வைத்து நேற்று உத்தரவிட்டுள்ளது.இந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை தடையின்றி எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்வதற்கு வசதியாக இந்த மசோதா வழி வகுக்கும் என, மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து மேற்கண்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கிவிட்டதால் தற்போது சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் இது விசாயிகளுக்கு முற்றிலும் எதிரான சட்டம் எனக்கூறி தமிழகம் உட்பட நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பிலும் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேவி போனியா உச்ச நீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட வேளாண் சட்டத்தை நாடு முழுவதும் உடனடியாக செயல்படுத்தக்கோரி அனைத்து மாநில அரசுகளுக்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதேப்போன்று பல்வேறு அமைப்புகள் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபன்னா மற்றும் ராமசுப்ரமணியன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து உத்தரவில், மேற்கண்ட விவகாரம் அரசு சார்ந்த திட்டம் என்பதால் நீதிமன்றம் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் புதிய பிரச்சனைகள் ஏற்படும் விதமாக வழிவகை அமைந்து விடும் என தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பாக பல்வேறு அமைப்புகள் தரப்பில் தாக்கல் செய்திருந்த அனைத்து மனுக்களையும் ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Tags : Dismissal ,states ,Supreme Court , Agricultural Laws, Petition, Discount, Supreme Court
× RELATED பிளஸ் 1 சேர்க்கைக்கு தேர்வு வேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு