ஊரடங்கில் வசூலித்த 6 மாத தவணைக்கான வட்டிக்கு வட்டி தொகையை நவ.5க்குள் வழங்க வேண்டும்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களிடம் வசூலிக்கப்பட்ட 6 மாத கடன் தவணைகளுக்கான வட்டிக்கு வட்டி தொகையை, நவம்பர் 5ம் ேததிக்குள் திருப்பி கொடுக்கும்படி வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. வங்கிகள், நிதி நிறுவனங்களில் மக்கள் வாங்கிய கடனுக்கான மாதத் தவணையை திருப்பி செலுத்துவதில் இருந்து, கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் 31 வரையிலான 6 மாதங்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்தது. ஆனால், இந்த தவணைக்காக மக்களிடம் வங்கிகள், நிதி றிறுவனங்கள் வட்டிக்கு வட்டி வசூலித்தன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ரூ.2 கோடி வரையிலான அனைத்து கடன்களுக்குமான 6 மாத தவணைக்கு வட்டிக்கு வட்டி ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

மேலும், ஊரடங்கு காலத்தில் தவணையை முறையாக திருப்பி செலுத்தியவர்களுக்கும் வட்டிக்கு வட்டி தொகைக்கு இணையான தொகை திருப்பி அளிக்கப்படும் என்றும் அறிவித்தது. இந்நிலையில், அனைத்து வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி நேற்று அதிரடி  உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், ‘வங்கிகளில் ரூ.2 கோடிக்கு மிகாமல் கடன் பெற்ற அனைவருக்கும் கடன் மீது வசூலிக்கப்பட்ட 6 மாதங்களுக்கான வட்டிக்கு வட்டி தொகையை உடனடியாக திருப்பி கொடுக்க வேண்டும். நவம்பர் 5ம் தேதிக்குள் இத்தொகையை வழங்கி முடிக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: