×

ப்ளீஸ் ரிட்டயர் ஆகாதீங்கனு இளம் வீரர்கள் சொல்றாங்க... கிறிஸ் கேல் பெருமிதம்

ஷார்ஜா: டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டாம் என பஞ்சாப் அணியில் உள்ள இளம் வீரர்கள் தன்னிடம் கேட்டுக்கொள்வதாக கிறிஸ் கேல் தெரிவித்துள்ளார். நைட் ரைடர்ஸ் அணியுடன் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாச்த்தில் அபாரமாக வென்றது. டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீசிய நிலையில், கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்தது. கில் 57, கேப்டன் மோர்கன் 40, பெர்குசன் 24 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் ஷமி 3, பிஷ்னோய், ஜார்டன் தலா 2, மேக்ஸ்வெல், எம்.அஷ்வின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய கிங்ஸ் லெவன் 18.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்து வென்றது. கே.எல்.ராகுல் 28 ரன், கிறிஸ் கேல் 51 ரன் (29 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுத்தனர். மன்தீப் 66 ரன் (56 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), பூரன் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆட்ட நாயகன் விருது பெற்ற கிறிஸ் கேல் கூறியதாவது: தற்போது என்னைப் பற்றியும் அணியை பற்றியும் ஒரு நல்ல உணர்வு ஏற்பட்டுள்ளது. அதை நன்கு பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக விளையாட முயற்சிக்கிறேன். ஆனால், இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. சுனில், வருண் என இரண்டு சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். அவர்களது பந்துவீச்சு வியூகத்தை கணித்து ஷாட்களை அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் மறு முனையில் இருந்த மன்தீப் மீதான அழுத்தத்தையும் குறைக்க முடிந்தது. சுனில் மிகச்சிறந்த ஸ்பின்னர், அவர் என்னை பல முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

இந்த ஆடுகளம் சுழலுக்கு அதிகமாக ஒத்துழைக்காத நிலையில், அவரது பந்துவீச்சை அடித்து விளையாட முடிவு செய்தேன். மன்தீப் அரைசதம் அடித்ததும், அதை சமீபத்தில் மறைந்த தனது தந்தைக்கு அர்ப்பணிக்கும் வகையில் வானத்தை நோக்கி சைகை செய்தது மிக அழகாக இருந்தது. முக்கியமான போட்டிகளில் மூத்த வீரர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என பயிற்சியாளர் வலியுறுத்தி இருந்தார். அதை நிறைவேற்ற முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி. அணியில் உள்ள இளம் வீரர்கள், டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வென்றது உண்மையிலேயே மிகப் பெரிய சாதனை தான். ஆனாலும்... இது போதாது. அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் வென்று பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முயற்சிப்போம். மொத்தத்தில் அணியின் ஒருங்கிணைந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. இவ்வாறு கிறிஸ் கேல் கூறினார். கிங்ஸ் லெவன் தனது அடுத்த லீக் ஆட்டத்தில் நாளை மறுநாள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சவாலை சந்திக்கிறது.

Tags : Chris Gale , Please tell, whats the story of them big puppys ..... Chris Gale is proud of them
× RELATED ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கிறிஸ் கேல்...