காஷ்மீரில் இனி யாரும் சொத்துக்கள் வாங்கலாம்: மத்திய அரசு புதிய சட்ட திருத்தம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் எந்தவொரு இந்திய குடிமகனும் சொத்துக்கள் வாங்கும் வகையில் புதிய சட்ட திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டம் 370ன் 35-ஏ பிரிவு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த்தின் கீழ், இந்த மாநிலத்தை சேர்ந்தவர்களை தவிர வேறு யாரும் இங்கு அசையா சொத்துக்கள் வாங்க முடியாது, அரசு வேலை கிடைக்காது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் அமலில் இருந்தன. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, மத்தியில் ஆளும் பாஜ அரசு அங்கு படிப்படியான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. 26 சட்டங்களை மாற்றி அமைத்துள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச மறுசீரமைப்பு (மத்திய அரசு சட்டங்களை தழுவி) மூன்றாவது ஆணை, 2020ஐ மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழை வெளியிட்டுள்ளது. அதில், ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி சட்டத்தின் 17வது பிரிவில் உள்ள `மாநிலத்தில் நிரந்தரமாக வசிப்பவர்கள் என்ற வார்த்தையை மட்டும் நீக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, இந்திய குடிமகன்கள் யாரும் காஷ்மீரில் இனிமேல் சொத்துக்கள் வாங்கலாம். இது உடனடியாக அமலுக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. புதிய சட்ட திருத்தத்தில் விவசாய நிலங்களை, விவசாயிகள் அல்லாதவருக்கு விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், விவசாய நிலத்தில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் கட்டுவதாக இருந்தால் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

* காஷ்மீர் விற்பனைக்கு...

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா அவரது டிவிட்டரில், `ஜம்மு காஷ்மீர் நில உரிமையாளர் சட்டம் தொடர்பான திருத்தங்கள் ஏற்று கொள்ளத் தக்கதல்ல. நிலங்கள், விவசாய நிலங்கள் வாங்குவது எளிதாக்கப்பட்டு இருப்பதன் மூலம் காஷ்மீர் மக்களின் உள்மாநில உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் தற்போது விற்பனைக்கு தயாராக உள்ளது. ஏழைகளாகிய சிறு நில உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள், என்று கூறியுள்ளார்.

Related Stories: