கேரள தங்கம் கடத்தல் வழக்கு துபாயில் தங்கியிருந்த ரபின்ஸ் ஹமீது கைது: இன்டர்போல் உதவியுடன் என்ஐஏ அதிரடி

திருவனந்தபுரம்: தங்கம் கடத்தல் வழக்கில் துபாயில் தலைமறைவாக இருந்த முக்கிய நபரான ரபின்ஸ் ஹமீதை,  இன்டர்போல் உதவியுடன் என்ஐஏ கைது செய்து கேரளா அழைத்து வந்துள்ளது. கேரள தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சொப்னா, சந்தீப் நாயர், சரித்குமார் ஆகியோரிடம் முதலில் சுங்க இலாகா விசாரித்தது. இதில் தங்கம் கடத்தலில் திருச்சூரை சேர்ந்த பைசல் பரீத், மூவாற்றுப்புழாவை சேர்ந்த ரபின்ஸ் ஹமீது ஆகியோருக்கு முக்கிய பங்கு இருப்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் தான் துபாயில் இருந்து தூதரக பார்சலில் தங்கத்தை அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் ரமீஸ் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரும் கைது செய்யப்பட்டார்.

ரமீஸிடம் நடத்திய விசாரணையில் இந்த கடத்தலுக்கு தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன் பிறகுதான் என்ஐஏ வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியது. இதைத்தொடர்ந்து சொப்னா, சரித்குமார், சந்தீப் நாயர், ரமீஸ், பைசல் பரீத், ரபின்ஸ் ஹமீது உட்பட பலர் மீது என்ஐஏ ‘உபா’ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில், பைசல் பரீத் மற்றும் ரபின்ஸ் ஹமீது ஆகியோர் துபாயில் இருந்ததால் ‘இன்டர்போல்’ உதவியுடன் அவர்களை கைது  செய்ய என்ஐஏ தீர்மானித்தது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு என்ஐஏ அதிகாரிகள் துபாய் சென்றனர். அங்கு பைசல் பரீதை என்ஐஏ கைது செய்ததாக தகவல் வெளியானது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கில் 10வது நபரான ரபின்ஸ் ஹமீதை ‘இன்டர்போல்’ உதவியுடன் என்ஐஏ கைது செய்துள்ளது. நேற்று முன்தினம் விமானம் மூலம் அவரை கொச்சி அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை  நடத்தப்பட்டது. மேலும், அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் என்ஐஏ தீர்மானித்துள்ளது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல என்ஐஏ மட்டுமல்லாது சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத்துறையும் ரபின்ஸ் ஹமீதிடம் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளன.

* தொழிலதிபர் யார்?

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த தாவூத் அல் அரபி என்ற தொழிலதிபர் தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்தலின் பின்னணியில் செயல்பட்டு வந்தார் என ரமீஸ், சுங்க இலாகா, என்ஐஏ மற்றும் மத்திய அமலாக்கப்பிரிவுக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் இது உண்மையான பெயரா? இல்லை வழக்கை திசைதிருப்ப கூறப்படும் போலியான பெயரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: