மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நவ.2ல் காத்திருப்பு போராட்டம்

சென்னை: தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நவம்பர் 2ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மின்சாரவாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உற்பத்தி பிரிவிலும், பகிர்மான பிரிவிலும் சுமார் 5000 பேர் பணியாற்றுகிறோம். நிரந்தர ஊதியம் இல்லாமல் வறுமையில் வாழ்ந்து வருகிறோம். எங்களது நீண்ட நாள் கோரிக்கையான அனைவரையும் அடையாளம் காணப்பட்டு தினக்கூலி ₹380 வழங்க வேண்டும் என்பதே.

ஆனால் இதுநாள் வரை இது நிறைவேற்றப்படாமல் உள்ளது. மேலும், கே 2 என்ற ஒப்பந்தத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான ஊதியம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முழுவதும் கிடைப்பதில்லை. அனுபவமிக்க நாங்கள் கேட்பது ரூ.380 தான். இதை தருவதற்கு தயங்குவது எவ்விதத்தில் மின்சார வாரிய வளர்ச்சிக்கு உதவும் என்று தெரியவில்லை. ஆகவே இதற்க்காக வருகிற நவம்பர் 2ம் தேதி, சென்னை அண் ணாசாலை தலைமை அலுவலகம் முன்பு தமிழகம் முழுவதும் உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் காத்திருப்பு போராட்டம் செய்ய முடிவெடுத்துள்ளோம். இதற்கான தீர்வு எட்டப்படாவிட்டால் தொடர் வேலை நிறுத்ததிலும் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்.

Related Stories: