×

சார்ஜர் போட்டு செல்போனில் பேசிய சிறுவன் பரிதாப பலி: பெரம்பூரில் சோகம்

பெரம்பூர்: சார்ஜர் போட்டுக்கொண்டு செல்போனில் பேசிய சிறுவன் மின்சாரம் பாய்ந்து இறந்த சம்பவம் பெரம்பூரில் சோகத்தை ஏற்படுத்தியது. பெரம்பலூர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகராசா. இவரது மகன் சஞ்சய் (17), கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி 1வது தெருவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, மூலக்கடை பகுதியில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் கடந்த ஒரு மாதமாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் செல்போனில் சார்ஜர் போட்டுக்கொண்டு நண்பரிடம் சஞ்சய் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக செல்போனில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், சஞ்சய் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவரது உடலை ஆம்புலன்சில் வைத்து உறவினர்கள் சொந்த ஊர் கொண்டு சென்றனர். அப்போது, பிரேத பரிசோதனை செய்யாமல், காவல்துறையிடம் தெரிவிக்காமல் உடலைக் கொண்டு வரக்கூடாது என்று சொந்த ஊரில் இருந்து சிலர் கூறியுள்ளனர். இதனால், மீண்டும் பாதி வழியிலேயே சஞ்சய் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லபட்டது. அதன்பிறகு கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் நேரில் சென்று விசாரணை செய்தனர். இந்நிலையில், நேற்று பிரேத பரிசோதனை முடிந்து, சஞ்சய் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் சடலத்தை ஆம்புலன்சில் வைத்து சொந்த ஊர் கொண்டு சென்றனர்.

Tags : Perambur , Boy who spoke on cell phone with charger killed: Tragedy in Perambur
× RELATED வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது