தரமற்ற காடா துணி கொள்முதல் முகக்கவசம் டெண்டரில் முறைகேடு: மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ குற்றச்சாட்டு

சென்னை: சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏவின் இளைய மகன் மறைந்த சு.அன்பழகன் நினைவாக 5 மாற்றுதிறளாளிகள் சங்கங்களுக்கு 25 ஆயிரம் முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி மா.சுப்பிரமணியன் இல்லத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: கொரோனா பேரிடர் காலத்தில் தொற்று பரவாமல் தடுக்க முகக்கவசங்கள் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. 2 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், ஒரு சிலருக்கு மட்டுமே அது வழங்கப்பட்டுள்ளது. மிகவும் மட்டமான காடா துணியில் தைக்கப்பட்ட முகக்கவசத்தை மக்களுக்கு வழங்கியுள்ளனர்.

அதையும் முறையாக வழங்கவில்லை. கண்ணுக்கு புலப்படாத நானோ மீட்டர் அளவுள்ள நுண்ணிய கிருமியை எப்படி இந்த காடா துணி தடுக்கும். பெரிய கொசு கூட சுலபமாக நுழைந்து விடும். அந்த அளவிற்கு தரமற்றதாக உள்ளது. காடா துணியியால் ஆன தரமற்ற முகக்கவசத்தின் விலையை கேட்டபோது வெறும் 1 ரூபாய் 30 காசு என்றனர். ஆனால், டெண்டரில் ஒரு முகக்கவசம் 6 ரூபாய்க்கு வாங்கபட்டதாக கணக்கு காண்பித்து மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. திமுக ஆட்சி காலத்தில் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப்பணித்துறை, மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை என அனைவரையும் அழைத்து பேசி நடவடிக்கை எடுத்தார். ஆனால் தற்போது முதலமைச்சர் பெயரளவில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை வைத்து கூட்டம் நடத்தியுள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கூட அழைக்காமல் கூட்டம் நடத்தியது ஒரு ஏமாற்று வேலை. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: