மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருமாவளவனை கண்டித்து பாஜ மகளிரணி ஆர்ப்பாட்டம்: கொடும்பாவி எரித்ததால் பரபரப்பு

தண்டையார்பேட்டை: இந்து மத பெண்களை கொச்சைப்படுத்தி பேசியதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜ மகளிரணி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் அணி மாநில செயலாளர் சுமதி வெங்கடேஷ் தலைமை வகித்தார். மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம், நடிகைகள் கவுதமி, காயத்ரி ரகுராம், சங்கவி உள்ளிட்டோர் கலந்துகொண்டு திருமாவளவனுக்கு எதிராக கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பாஜ மாநில கலை, கலாச்சார பிரிவு தலைவரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் பேசுகையில், ‘‘திருமாவளவனுக்கு கெட்ட நேரம் தொடங்கி விட்டது. இனி யாராலும் அவரை காப்பாற்ற முடியாது,’’ என்றார். நடிகை கவுதமி பேசுகையில், ‘‘பெண்களை மதிப்பதை திருமாவளவனின் அரசியல் லாபத்துக்காக துளியும் விட்டுத்தர கூடாது. திருமாவளவன் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,’’ என்றார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாஜ தொண்டர்கள் திருமாவளவனின் கொடும்பாவியை எரித்தும், சாலை மறியலிலும் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: