×

உள்ளாவூர் - பினாயூர் இடையே தடுப்பணை அமைக்க கோரி முதல்வரிடம் மனு கொடுக்க விவசாயிகள் நடைபயணம்: 100க்கும் மேற்பட்டோர் கைது

உத்திரமேரூர்: உள்ளாவூர் - பினாயூர் இடையே தடுப்பணை அமைக்க கோரி, முதலமைச்சரிடம் மனு கொடுக்க கோட்டையை நோக்கி விவசாயிகள் நடைபயணம் மேற்கொண்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், 100க்கு மேற்பட்டோரை கைது செய்தனர். உத்திரமேரூர் அருகே பாலற்றின் குறுக்கே பினாயூர் மற்றும் உள்ளாவூர் இடையே தடுப்பணை கட்ட தமிழக முதல்வர் எடப்பாடி கடந்த சில மாதங்களுக்கு முன் காணொலி காட்சி மூலம், அடிக்கல் நாட்டினார். இதற்காக உள்ளாவூர் பாலாற்றங்கரையில் பூமி பூஜை போடப்பட்டது.

அந்த இடத்தில், தடுப்பணை கட்டினால் பினாயூர், அரும்புலியூர், சீத்தாவரம், சாலவாக்கம் உள்ளாவூர், பாலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள குளம், ஏரி, கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பும். இதனால், சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். அப்பகுதி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மக்களின் குடிநீர் ஆதாரம் உயர்வு ஏற்படும். ஆனால், பூமி பூஜை போடப்பட்ட இடத்தில் தடுப்பணை கட்டாமல், அங்கிருந்து சுமார் 2 கிமீ தூரத்தில், பாலாற்றின் குறுக்கே, திருமுக்கூடல் மேம்பாலம் அருகே தடுப்பணை கட்டுவதற்கான பணிகள் கடந்த 3 வாரங்களுக்கு முன்  துவங்கப்பட்டன. இதனால் பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் கால்வாய்கள், நீர் செல்ல வழியின்றி விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த தடுப்பணை பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து, விவசாயிகளிடம் மாவட்ட நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில், முதலமைச்சர் அடிக்கல் நாட்டிய உள்ளாவூர் - பினாயூர் இடையே தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 100க்கு மேற்பட்ட விவசாயிகள், திருமுக்கூடலில் இருந்து முதல்வரிடம் மனு கொடுக்க கோட்டையை நோக்கி நேற்று காலை நடைபயணம் மேற்கொண்டனர். தகவலறிந்து சாலவாக்கம் போலீசார், அனுமதியின்றி நடைபயணம் மேற்கொண்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை, கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர், மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Pinayur ,Ullavur , More than 100 arrested in farmers' march to petition CM
× RELATED உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில்...