தி.நகர் நட்சத்திர ஓட்டலில் தனிமையில் இருந்தபோது மருத்துவ முதுநிலை மாணவர் விஷம் குடித்து தற்கொலை: பணிச் சுமையா என போலீசார் விசாரணை

சென்னை: கொரோனா வார்டில் டாக்டராக இருந்த சென்னை மருத்துவ கல்லூரி முதுநிலை முதலாமாண்டு மாணவர் ஒருவர், நட்சத்திர ஓட்டலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பணிசுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் மேட்டூர் வனவாசி கிராமம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் லோகேஷ்குமார்(24). சென்னை மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து மருத்துவரானார். பின்னர் அதே மருத்துவ கல்லூரியில் லோகேஷ்குமார் மருத்துவ முதுநிலை முதலாமாண்டு மாணவராக படித்து வந்தார். மருத்துவ அறுவை சிகிச்சை மாணவரான லோகேஷ்குமார் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் கடந்த 14ம் தேதி வரை டாக்டராக பணியில் இருந்தார். வழக்கமாக கொரோனா வார்டில் பணியில் இருந்த மருத்துவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்துவது வழக்கம்.

அதன்படி லோகேஷ்குமார் தி.நகரில் தியாகராயா சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எண் 419ல் தனிமைப்படுத்தி கொண்டிருந்தார். கடந்த 25ம் தேதி மதியம் ஓட்டல் ஊழியரிடம் செல்போனில் பேசி இருந்தார். அதன் பிறகு அவர் ஓட்டலில் உள்ள ஊழியர்கள் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. அன்றைய தினமே தனது தந்தை நாகராஜிடம் போனில் பேசியதாகவும், அப்போது எனக்கு மனஅழுத்தமாக இருப்பதாக கூறியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு லோகேஷ்குமார் யாரையும் தொடர்பு கொள்ள வில்லை.  இதற்கிடையே லோகேஷ்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் செல்போனில் தொடர்பு கொண்ட போது, லோகேஷ்குமார் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மாமா கார்த்திக் ஓட்டல் நிர்வாகத்திடம் செல்போனில் தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

அதன்படி ஓட்டல் ஊழியர்கள் லோகேஷ்குமார் தங்கி இருந்த 419 அறையின் கதவை பல முறை தட்டியும் அவர் கதவை திறக்க வில்லை. இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் மாற்று சாவி மூலம் அறையை திறந்து பார்த்தனர். அப்போது டாக்டர் லோகேஷ்குமார் படுக்கையிலேயே வாந்தி எடுத்த நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஓட்டல் ஊழியர்கள் பாண்டிபஜார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் நட்சத்திர ஓட்டலில் இறந்து கிடந்த டாக்டர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து ஓட்டல் ஊழியர்கள் மற்றும் அவரது செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் டாக்டர் லோகேஷ்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு குடும்பத்தில் எந்த பிரச்னையும் கிடையாது. இதனால் டாக்டர் லோகேஷ்குமார் எந்த பிரச்னைக்காக விஷம் குடித்தார். தற்கொலைக்கு காதல் விவகாரமா அல்லது பணிசுமையா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் டாக்டர் ஒருவர் தனிமைப்படுத்தி கொண்டிருந்தபோது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டாக்டர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: