தீபாவளி பண்டிகையையொட்டி தீவுத்திடலில் 6ம் தேதி முதல் பட்டாசு விற்பனை கொரோனாவால் 10 நாட்களுக்கு மட்டும் அனுமதி

* கடைகள் எண்ணிக்கை குறைந்தது

* குறுகியகால டெண்டர் வெளியீடு

சென்னை: தீபாவளியை முன்னிட்டு தீவுத்திடலில் 6ம் தேதி முதல் பட்டாசு விற்பனை தொடங்குகிறது. கொரோனா பாதிப்பால் விற்பனை 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.  தீபாவளியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பாக சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை நடைபெறுவது வழக்கம். இங்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வந்து பட்டாசுகள் வாங்கி செல்வார்கள். இந்தாண்டு கொரோனா பாதிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக மக்கள் அதிமாக கூடும் இடங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் தவிர பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல சினிமா தியேட்டர், பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால், கொரோனாவின் பாதிப்பு தற்போது குறைய தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் மக்கள் அதிகமாக கூடும் தீவுத்திடலில் இந்தாண்டு தீபாவளி பட்டாசு விற்பனை நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பட்டாசு விற்பனைக்காக குறுகிய கால டெண்டர் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் திடீரென விடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த ஆண்டு வருகிற 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை மட்டும் பட்டாசு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக தீவுத்திடலில் 20 நாட்கள் பட்டாசு விற்பனை நடைபெறு வருவது வழக்கம். கொரோனா பாதிப்பால் விற்பனை 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. 70 அரங்குகள் அமைத்த இடத்தில் 50 சதவீதம் கடைகள் மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக 3 மீட்டர் இடைவெளியில் ஒவ்வொரு கடைகளுக்கான அரங்குகள்  அமைக்கப்படும். ஆனால் இந்தாண்டு இந்தாண்டு 6 மீட்டர் இடைவெளியில் அரங்குகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா காலக்கட்டத்தில் பட்டாசு வாங்க வருபவர்கள் என்னென்ன வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற தெளிவான எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. பட்டாசுகள் வாங்க பெரும்பாலும் குழந்தைகள், சிறுவர்கள் தான் அதிக அளவில் வருவது வழக்கம். அப்படியிருக்கும் போது அவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மழைக்காலத்தில் கொரோனாவின் பாதிப்பு இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பட்டாசு விற்பனை தேவையா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.

Related Stories: