ராணுவ தொழில்நுட்ப தகவல்கள் பரிமாற்றம் இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம்

புதுடெல்லி: எல்லையில் சீனா மிரட்டி வரும் பதற்றமான சூழ்நிலையில்,  இந்தியா-அமெரிக்கா இடையே ராணுவ தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம், எதிரிகளின் நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிய உதவும் அமெரிக்காவின் ராணுவ செயற்கைக்கோள் புகைப்படங்கள், வரைபடங்கள் போன்றவை இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளது. இந்தியா-அமெரிக்கா நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் இடையேயான 2+2 பேச்சு வார்த்தை கடந்த 2018ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. இரு தரப்பு உறவை பலப்படுத்தும் இப்பேச்சுவார்த்தையின் 3ம் ஆண்டு சந்திப்பு டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நேற்று நடந்தது. இதில் இந்தியா தரப்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும் பங்கேற்றனர்.

எல்லையில் கடந்த 5 மாதமாக சீனா மிரட்டி வரும் பதற்றமான சூழ்நிலையில், இந்த உயர்மட்ட சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. இதில், இருதரப்பு ராணுவ உறவை மேலும் உயர்த்துவது குறித்தும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பரஸ்பர நலனில் உள்ள பரந்த பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவ செயற்கைகோள் தகவல்களை இந்தியாவுக்கு உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள வகை செய்யும், உயர்மட்ட ராணுவ தொழில்நுட்ப ஒப்பந்தம் கையெழுத்தானது.  ‘அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம்’ (பிஇசிஏ) எனப்படும் இது, இருநாடுகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தமாக கருதப்படுகிறது. இதன் மூலம், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ரகசிய வரைப்படங்கள், செயற்கைக்கோள் உளவுத் தகவல்கள் உட்பட முக்கிய தகவல்களை இருநாடுகளும் பரிமாறிக் கொள்ளும்.

இதன் மூலம், அமெரிக்க ராணுவ செயற்கைக்கோள் மூலமாகவும், அமெரிக்க தொழில்நுட்பம் மூலமாகவும் எதிரிகள் எந்த இடத்தில் இருந்து எந்த இடத்திற்கு நகர்கிறார்கள் என்பதை  இந்திய ராணுவம் மிக துல்லியமாக கவனித்து தெரிந்து கொள்ள முடியும். சீனா, பாகிஸ்தான் உடனான எல்லைப் பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகள் இருந்தால், அதனை உடனடியாக கண்டறிந்து துல்லியமாக தாக்குதல் நடத்தலாம். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, 4 அமைச்சர்களும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘அமெரிக்காவுடனான ராணுவ உறவு மிகச்சிறந்த முறையில் முன்னோக்கி நகர்கிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்ட இரு தரப்பும் உறுதி ஏற்றுள்ளன,’’ என்றார். இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து எஸ்பரும் பாம்பியோவும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்கள்.

4வது முக்கிய ஒப்பந்தம்

* அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம்’ (பிஇசிஏ) என்ற இந்த ஒப்பந்தம், இருதரப்பு உறவை கணிசமாக விரிவுபடுத்துவதற்கு முக்கியமாக அடையாளம் காணப்பட்ட 4 ஒப்பந்தங்களின் நிறைவாக கையெழுத்தாகி உள்ளது.

* இதற்கு முன், 2002ல் இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ தகவல்களை பாதுகாப்புடன் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

* 2016ல் முக்கிய ராணுவ கூட்டாளியாக இந்தியாவை அங்கீகரித்த அமெரிக்கா இரு

தரப்பு ராணுவ வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் செய்தது.

* 2018ல் தங்களின் ராணுவ தளங்களை இரு நாடுகளும் பயன்படுத்திக் கொள்ளவும் ஒப்பந்தம் செய்துகொண்டன. இறுதியாக தற்போது பிஇசிஏ ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகி உள்ளது.

Related Stories:

>