கேரள தங்கக் கடத்தல் வழக்கு...!! ராபின்ஸ ஹமீதுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

கொச்சி: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ராபின்ஸ ஹமீதுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நவ.3-ம் தேதி வரை ராபின்ஸ ஹமீதுவை விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி அளித்து கொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சொப்னா, சந்தீப் நாயர், சரித்குமார் ஆகியோரிடம் முதலில் சுங்க இலாகா விசாரித்தது. இதில் தங்கம் கடத்தலில் திருச்சூரை சேர்ந்த பைசல் பரீத், மூவாற்றுப்புழாவை சேர்ந்த ரபின்ஸ் ஹமீது ஆகியோருக்கு முக்கிய பங்கு இருப்பது தெரியவந்தது.

இவர்கள் 2 பேரும் தான் துபாயில் இருந்து தூதரக பார்சலில் தங்கத்தை அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் ரமீஸ் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரும் கைது செய்யப்பட்டார். ரமீஸிடம் நடத்திய விசாரணையில் இந்த கடத்தலுக்கு தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன்பிறகுதான் என்ஐஏ வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியது. இதைத்தொடர்ந்து சொப்னா, சரித்குமார், சந்தீப் நாயர், ரமீஸ், பைசல் பரீத், ரபின்ஸ் ஹமீது உட்பட பலர் மீது என்ஐஏ ‘உபா’ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தது. இந்த நிலையில் பைசல் பரீத் மற்றும் ரபின்ஸ் ஹமீது ஆகியோர் துபாயில் இருந்ததால் ‘இன்டர்போல்’ உதவியுடன் அவர்களை கைது செய்ய என்ஐஏ தீர்மானித்தது.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு என்ஐஏ அதிகாரிகள் துபாய் சென்றனர். அங்குவைத்து பைசல் பரீதை என்ஐஏ கைதுசெய்ததாக தகவல் வெளியானது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கில் 10வது நபரான ரபின்ஸ் ஹமீதை ‘இன்டர்போல்’ உதவியுடன் என்ஐஏ கைது செய்துள்ளது. மேலும் நேற்று விமானம் மூலம் அவரை கொச்சி அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் ரபின்ஸ ஹமீதுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நவ.3-ம் தேதி வரை ராபின்ஸ ஹமீதுவை விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி அளித்து கொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>