×

இந்தியாவின் வளர்ச்சி இந்தாண்டு எதிர்மறையாகவோ அல்லது பூஜ்யமாகவோ இருக்கும்; நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

டெல்லி: இந்தியாவின் வளர்ச்சி இந்தாண்டு எதிர்மறையாகவோ அல்லது பூஜ்யமாகவோ இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார். இந்தியாவின் ஆற்றல் அமைப்புக்கான இந்த ஆண்டு கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். விழாக்காலம் தொடங்கியதன் விளைவாக தேவைகள் அதிகரித்தாலும் நிலைநிறுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். பொருளாதார மந்தநிலை என்பது கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா சந்தித்து வரும் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. 2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நாள் முதலே இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட சமயத்திலும் பொருளாதார வீழ்ச்சி மிக மோசமானது. வளர்ச்சியை மீட்டெடுக்கும் முயற்சியில் மத்திய மோடி அரசு ஈடுபட்டு வந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்த கொரோனா வைரஸ் பிரச்சினையால் இந்தியா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதார வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன. உலக வங்கி வெளியிட்டிருந்த அறிக்கையில் நடப்பு 2019-20 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 9.6 சதவீதம் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று எச்சரித்திருந்தது. ஆனாலும், அரசு தரப்பில் விரைவில் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்புவோம் என்று கூறப்பட்டு வருகிறது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூட, வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாகவோ அல்லது பூஜ்ஜியமாகவோ இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்திய ஆற்றல் மாநாட்டில் பேசிய நிர்மலா சீதாராமன், ”ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் தெரிகிறது. விரைவில் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்புவோம் என்று நம்பிக்கை உள்ளது. ஆனால், இந்த ஆண்டில் அதற்கான வாய்ப்புகள் குறைவுதான். பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் எதிர்மறையாகவோ அல்லது பூஜ்ஜியமாகவோ இருக்கும். அடுத்த நிதியாண்டில் கட்டாயம் வளர்ச்சி ஏற்படும். பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், பொதுச் செலவுகளில் கவனம் செலுத்துவதிலும் அரசு தொடர்ந்து மும்முரமாகச் செயல்படும்” என்று கூறினார்.

Tags : growth ,India ,Nirmala Sitharaman , India’s growth this year will be negative or zero; Finance Minister Nirmala Sitharaman's speech
× RELATED வளர்ச்சி பாதிப்பதை தடுக்க...