திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்த சுவரொட்டிக்கு கடும் கண்டனம்:டுவிட்டரில் #போஸ்டர்பழனிச்சாமி ஹேஷ்டாக் டிரெண்டிங் ஆகி தமிழகத்தில் முதலிடம்.!!!

கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் “பெயர் போடாமல்” “அநாகரிகமாக” திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குறித்து சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்  கொடுக்கப்பட்டது. ஆனால் புகார் கொடுத்த திமுகவினர் மீதே வழக்குப் போட்டு கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருக்கிறது அங்குள்ள காவல்துறை. அப்படிப் பொய் வழக்குப் போடுவதற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டிருக்கிறார்.

இதுபோன்று தரக்குறைவான சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் மீது திமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும். திமுகவின் மீது போடப்பட்டுள்ள பொய்  வழக்குகளை திரும்ப பெற வேண்டும். அவ்வாறு போஸ்டர் ஒட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாவிட்டால் திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்  அறிக்கை வெளியிட்டார்.

இதற்கிடையே, மு.க.ஸ்டாலினுக்கு எதிரான சுவரொட்டிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கோவை குனியமுத்தூர் காவல்நிலையம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தில்  ஆயிரணக்கணக்கான திமுகவினர் பங்கேற்றனர். போராட்டம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட உதயநிதி ஸ்டாலின், கொங்கு மண்டலத்தை ஊழலால் சீரழித்து- போஸ்டர் ஒட்டித்திரியும் அடிமைகளின் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி  வைப்பதற்கான தொடக்கமே இது. ஆர்ப்பாட்டத்தை வெல்லச்செய்த 5 மா.பொறுப்பாளர்கள், து.செயலாளர்-மா.அமைப்பாளர் உள்ளிட்ட இளைஞரணியினர், கழக முன்னோடிகள், தொண்டர்களுக்கு அன்பும் நன்றியும்.

எடப்பாடி-வேலுமணி கும்பலின் ஊழலையும்; கழகத்தினர்மீது பொய் வழக்குப்போடும் காவல்துறையையும் கண்டித்து கோவையில் இன்று எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோம். குனியமுத்தூர் காவல்நிலையம் எதிரே  அனுமதிமறுத்தவர்கள், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதித்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு அதிகாலை முதலே கொங்குமண்டல கழகத்தினர் ஏராளமானோர் குவிந்தனர். உடனே மேலிட அழுத்தத்தால் ஆர்ப்பாட்டமே  கூடாது என நெருக்கடி தந்தது காவல்துறை. தீரமிக்க கழகத்தினர்-இளைஞர்கள் ஓர் அடிகூட நகரவில்லை. அவர்களின் நெஞ்சுறுதி காவல்துறையை பின்வாங்க செய்தது #போஸ்டர்பழனிச்சாமி என்று ஹேஷ்டாக் பதிவிட்டிருந்தார்.

தற்போது இந்த #போஸ்டர்பழனிச்சாமி என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது. மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக இணையவாசிகள் #போஸ்டர்பழனிச்சாமி என்ற  ஹேஷ்டாக் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

Related Stories:

>