×

‘எல்லாம் சிறப்பாக இருந்தது’... கே.எல்.ராகுல் மகிழ்ச்சி

ஷார்ஜா: ‘இப்போட்டியில் எங்கள் அணியின் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என எல்லாமே சிறப்பாக அமைந்தது’ என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ராகுல், பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணியின் ஓபனர்களில் சுப்மான் கில் 57 ரன்கள் எடுத்தார். நிதிஷ் ராணா டக் அவுட் ஆனார். கேப்டன் மோர்கன் 40 ரன்களும், பெர்கூசன் 24 ரன்களும் எடுத்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கங்களில் விக்கெட்டுகளை பறி கொடுத்து வெளியேற, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை மட்டுமே கொல்கத்தா எடுத்தது.

பஞ்சாப் பவுலர்களில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளும், ஜோர்டான் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். வெற்றிக்கு தேவை 150 ரன்கள் என ஆட்டத்தை துவக்கிய, பஞ்சாப் ஓபனர்களில் ராகுல் 28 ரன்களும், மன்தீப் சிங் ஆட்டமிழக்காமல் 66 ரன்களும் எடுத்தனர். கிறிஸ் கெய்ல் 29 பந்துகளில் 51 ரன்களை விளாசி, அணியின் வெற்றிக்கு காரணமானார். 18.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப், இப்போட்டியில் எளிதாக வென்றது. ஆட்டநாயகனாக அதிரடி காட்டிய கிறிஸ் கெய்ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில், ‘இப்போட்டியில் எங்கள் அணியின் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என எல்லாமே சிறப்பாக இருந்தது. முதலில் கொல்கத்தாவை 149 ரன்களில் எங்கள் பவுலர்களும், ஃபீல்டர்களும் கட்டுப்படுத்தினர்.

தொடர்ந்து இலக்கை துரத்தி ஆடுகையில் டாப் ஆர்டரில் அனைவருமே தேவையான ரன்களை எடுத்தோம். இதனால் வெற்றி எளிதானது’’ என்று மகிழ்ச்சி தெரிவித்தார். ஆட்டநாயகன் கிறிஸ் கெய்ல் கூறுகையில், ‘ஒரு முனையில் மன்தீப் சிங்குடன் நின்று ஆடியது நல்ல அனுபவம். கிரிக்கெட்டில் இருந்து, நான் ஓய்வு பெறக் கூடாது என என்னிடம் அடிக்கடி மன்தீப் சிங் சொல்லிக் கொண்டே இருக்கிறார். அவரது எண்ணம் போலவே சிறப்பாக இப்போட்டியில்  ஆடியிருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி’ என்று தெரிவித்தார்.

Tags : KL Rahul , ‘Everything was great’ ... KL Rahul happy
× RELATED பயனற்று போகும் மலர்சாகுபடி...