×

கொரோனா பரவலால் ஊர் திரும்பிய ஓட்டல் தொழிலாளிகளால் திறக்கப்படும் பிரியாணி கடைகள்

அறந்தாங்கி: கொரோனா பரவலால் வெளிநாடு உள்பட பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த ஓட்டல் தொழிலாளிகள், மீண்டும் தாங்கள் பணிபுரிந்த இடத்திற்கு சென்று வருமானம் ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டதால், தங்கள் பகுதியிலேயே பிரியாணி கடைகளை திறந்து வருகின்றனர்.

அசைவப் பிரியர்கள் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் பிரியாணியும் ஒன்று. சிக்கன், மட்டன், முட்டை, வான்கோழி பிரியாணி என பல்வேறு வகைகளில் பிரியாணியில் சேர்க்கப்படும் இறைச்சிக்கு தக்கவாறு பெயரும் வேறுபடும்.
இது தவிர தலைப்பாகட்டி பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, தம்பிரியாணி என பிரியாணி பிரியர்களை கவர்ந்து இழுக்க பல்வேறு கவர்ச்சியான பெயர்களும் சூட்டப்படுகின்றன. திருமணம் போன்ற விசேசங்களிலும் தற்போது அசைவ சாப்பாட்டிற்கு பதிலாக பிரியாணி விருந்து வைக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. மேலும் அரசியல் கட்சிகளின் நிகழ்வு என்றாலே அங்கு பிரியாணி மணம் கட்டாயம் வீசும்.

சிலர் ஒன்று கூடி உணவு உண்ண விரும்பினாலும், நண்பர்களுடன் மது விருந்து வைத்தாலும், தொழிலாளிகள் குறைந்த செலவில் அசைவ உணவு உண்ண விரும்பினாலும் பிரியாணியையே தேர்வு செய்கின்றனர். இதற்கு காரணம் அதன் விலைதான். ஒரு அவித்த முட்டை, கோழியின் சதையுடன் கூடிய ஒரு கால்பகுதி(லெக்பீஸ்), தயிர்வெங்காயம் போன்றவற்றுடன் சிக்கன் பிரியாணி ஒரு பார்சல் ரூ.100 மட்டுமே . குறைவான விலையில் மனதுக்கு நிறைவான அசைவ உணவு கிடைப்பதால், பெரும்பாலானவர்கள் மதிய உணவிற்கு பிரியாணியையே வாங்கி சாப்பிடுகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு முன்பு, ஒவ்வொரு நகரிலும் ஒரு குறிப்பட்;ட அதாவது நடுத்த நகர்களில் சுமார் 10 கடைகள் வரை இருந்தன. ஆனால் கொரோனா பரவலுக்கு பிறகு,ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது நகரம் மட்டுமல்ல, 20 கடைகள் உள்ள சிறிய நகரில் கூட தற்போது பிரியாணி கடைகள் முளைத்துள்ளன. இது தவிர சாலை ஓரங்களிலும் ஏராளமான பிரியாணி கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. அறந்தாங்கி போன்ற நகரில், எங்காவது ஒரு இடத்தில் வாரத்திற்கு 2 பிரியாணி கடைகளாவது திறக்கப்பட்டு வருகின்றன. மேலும் வீடுகளில் பிரியாணி தயாரிக்கப்பட்டு, சுடச்சுட டோர் டெலிவரி செய்யப்படும் பிரியாணி நிறுவனங்களும் தொடங்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து புதிதாக பிரியாணி கடை திறந்துள்ள ஒருவர் கூறியது:என்னைப் போன்ற பலரும், வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓட்டல் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தோம். கொரோனா பரவலால் ஏறத்தாழ உலகம் முழுதுமே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால் ஓட்டல்களில் பணிபுரிந்தவர்களுக்கு வேலை கிடைக்காமலும் சொந்த ஊர் திரும்ப முடியாமலும் சிரமப்பட்டு வந்தோம். பின்னர் நாங்கள் சொந்த ஊருக்கு வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டபோது, நாங்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் சொந்த ஊர் திரும்பினோம். தற்போது நிலமை ஓரளவு கட்டுக்குள் வந்தாலும், வெளிநாடு செல்ல முடியாத நிலை உள்ளது. வெளிநாடு மற்றும் இந்தியாவில் உள்ள பல ஓட்டல்களில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த பலரும் தற்போது பல்வேறு பகுதிகளில் பிரியாணி கடை, பாஸ்ட் புட் கடைகளை திறந்து நடத்தி வருகின்றனர். பிரியாணி கடைகளால், கடைகளின் உரிமையாளர்களுக்கு தங்கள் குடும்பத்தை காப்பாற்றும் அளவிற்கும் கண்டிப்பாக வருமானம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். கொரோனா பரவலால் வேலை இழந்த ஓட்டல் தொழிலாளிகளுக்கு பிரியாணி கடைகள் ஓரளவு வருமானம் தருவதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : shops ,hotel workers ,home ,outbreak ,Corona , Aranthangi, Corona, Biryani
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் நாளை கடைகளை திறக்கவேண்டும்: ஆட்சியர் அண்ணாதுரை