×

15 மாவட்டங்கள்... 50 கிராமங்கள்... 2 ஆயிரம் புத்தகங்கள்... கிராமப் பள்ளிகளில் நூலகம்!

நன்றி குங்குமம்

ஆச்சர்யப்படுத்தும் இளைஞர் அமைப்பு

‘‘குழந்தைகள் புத்தகங்கள் வாசிக்கணும் என்பது அப்துல்கலாம் சாரின் கனவு. அவருக்கு குழந்தைகள் மீது அளவுகடந்த அன்பு இருந்தது. அதனாலேயே கனவு காணுங்கள்னு தொடர்ந்து சொல்லிட்டே இருந்தார். நிறைய புத்தகங்களை வாசிக்கச் சொன்னார். ஏன்னா, புத்தகங்கள் படிக்கும்போதுதான் வெளியுலகுடன் தொடர்பு ஏற்படும். அறிவு விரிவடையும். சில புத்தகங்கள் தங்களையே உள்நோக்கி பார்க்க வைக்கும். நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடியும். இதனாலயே நாங்க நூலக கான்செப்ட்டை கையிலெடுத்தோம்...’’ நம்பிக்கை மிளிர பேசுகிறார் ‘துல்கல்’ அமைப்பைச் சேர்ந்த அம்ரிதா பிரேம். சென்னையைச் சேர்ந்த ஐந்து இளைஞர் - இளைஞிகளால் உருவாக்கப்பட்ட அமைப்பு இது. இவர்களின் வேலையே கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஒரு நூலகத்தை அமைத்துத் தருவதுதான். அதன்வழியே குழந்தைகளைப் புத்தகங்கள் வாசிக்கச் செய்வதும், அவர்களின் அறிவை விரிவடையச் செய்வதும்தான். அதற்காகவே தொடர்ந்து உழைத்து வருகிறது இந்த அமைப்பு. கொரோனா கால ஊரடங்குக்கு முன்பு இரண்டு அரசுப் பள்ளிகளில் நூலகத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர் இந்த அமைப்பினர். இப்போது ‘வீதி நூலகங்கள்’ என்ற கான்செப்ட் மூலம் தெருக்களில் நூலகங்கள் அமைத்து குழந்தைகளை நூலகங்கள் பக்கம் திருப்பி வருகின்றனர். ‘‘இந்த ‘துல்கல்’ பெயரே அப்துல்கலாம் சார் பெயர்ல இருந்து எடுத்ததுதான். அப்துல்ல இருந்து ‘துல்’லும் கலாம்ல இருந்து ‘கல்’லும் சேர்த்து ‘துல்கல்’னு வச்சோம்...’’ என்கிற அம்ரிதாவைத் தொடர்ந்தார் லீலா. ‘‘இந்த அமைப்பை நான், அம்ரிதா, கார்த்திகேயன், எமிலி ரோஸ், மரியன் பிரிட்டோனு ஐந்து பேர் சேர்ந்து ஆரம்பிச்சோம். நாங்க எல்லோரும் வெவ்வேறு கல்லூரியில் வெவ்வேறு கோர்ஸ் படிச்சவங்க. ஆரம்பத்துல வெவ்வேறு தன்னார்வலர் அமைப்புகள்ல வேலை செய்திட்டு இருந்தோம்.

அப்படி வேலை பார்க்கும்போது எங்களுக்குள்ள பழக்கம் ஏற்பட்டுச்சு. எங்க எல்லோருக்குமே குழந்தைகளுக்கு புத்தகங்கள் வழங்கணும்ங்கிற ஐடியா இருந்தது. அப்ப நாம் ஏன் நூலகம் மாதிரி ஆரம்பிக்கக் கூடாதுனு தோணுச்சு. சென்னை மாதிரியான நகரங்களில் நிறைய நூலகங்கள் இருக்கு. கிராமங்கள்லயும், பழங்குடி கிராமங்கள்லயும் இப்படியான நூலக வசதியில்ல. அங்குள்ள பள்ளிக் குழந்தைகளுக்கும் நூல்கள் போகணும்; அவங்களும் படிக்கணும்னு நினைச்சோம். அதனால கடந்த ஜனவரி மாசம்தான் இந்த அமைப்பை உருவாக்கினோம்...’’ என ‘துல்கல்’ உருவான விதத்தை லீலா சொல்ல, அம்ரிதா தொடர்ந்தார்.  ‘‘அமைப்பைத் தொடங்கினதும் ரெண்டு இடங்கள்ல நூலகங்கள் ஏற்படுத்திக் கொடுத்தோம். முதல்ல, விழுப்புரம் மாவட்டம் அணையேறி கிராமத்துல உள்ள தொடக்கப்பள்ளியில் ஒரு நூலகம் ஏற்படுத்தினோம். அங்க அறுநூறு புத்தகங்கள் வரை கொடுத்தோம். அடுத்து திருவண்ணாமலை மாவட்டம் வெங்களத்தூர் கிராமத்துல உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒரு நூலகம் அமைச்சுக் கொடுத்தோம். இந்தப் பள்ளிக்கு ஐநூறு புத்தகங்கள் வரை வழங்கினோம். அங்குள்ள பசங்களோட வயசு, அவங்களுக்குத் தேவைப்படுற நூல்கள்னு பார்த்துப் பார்த்து கொடுத்தோம். பொதுவா, நாங்க நூலகம் வச்சு கொடுக்கும்போதே இன்னொரு விஷயமும் செய்து கொடுப்போம். அதாவது, வெறும் புத்தகங்களும், ரேக்குகளும் மட்டும் ஒரு நூலகத்தை அலங்கரிக்காது. அதனால, எங்களுடன் இணைஞ்ச மற்ற தன்னார்வலர்களையும் கூப்பிட்டுப் போய் அங்க ஓவியங்களும் வரைஞ்சு கொடுப்போம். நூலகத்திற்குள்ள குழந்தைகள வரவைக்கிறமாதிரி அந்த ஓவியங்களைத் தீட்டுவோம்...’’ என்கிறவரைத் தொடர்ந்தார் கார்த்திகேயன்.  

‘‘இந்த நூலகங்களுக்கான புத்தகங்களை நண்பர்கள் வழியா கொண்டு சேர்க்கிறோம். இதுக்குத் தேவையான நிதியை நண்பர்கள் வழியாவும், சமூகவலைத் தளங்கள் மூலமும் திரட்டுகிறோம். ரெண்டு பள்ளிகள்ல நூலகம் அமைச்சு முடிக்கும்போதே மார்ச்ல கொரோனா வந்திடுச்சு. அதனால, நூலகப் பணியை நிறுத்தினோம். இந்நேரம், ‘துல்கல் டாக்ஸ்’, ‘துல்கல் புக் ஷாப்’னு ரெண்டு விஷயத்தை முன்னெடுதோம். ‘துல்கல் டாக்ஸ்’ என்பது ஒவ்வொரு துறையிலும் சமூகத்திற்காக பணி செய்திட்டு இருக்கிறவங்களின் அனுபவத்தைப் பகிர்வது. ‘துல்கல் புக் ஷாப்’ என்பது பெரியவங்களுக்காக பண்ணினது. ஏன்னா, ஒரு புத்தகத்தை எல்லோரும் படிச்சிருப்பாங்கனு சொல்ல முடியாது. அதனால, புத்தக உரையாடலுக்காக இந்த விஷயத்தை முன்னெடுத்து செய்றோம். புத்தகத்தைப் படிச்சிட்டு அதுபத்தின விவாதம் இதில் அரங்கேறும். எல்லாமே ஆன்லைன்தான். அடுத்து, புத்தகத்தைப் பரிசாக அளிப்போம்னு ஒரு பிரசாரத்தை இந்தக் கொரோனா காலத்துல தொடங்கினோம். சென்னை போன்ற நகரங்கள்ல ஆன்லைன் வகுப்புகள் மூலம் பசங்க பாடங்களை கத்துக்கிடுறாங்க. ஆனா, கிராமங்கள், பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகள்ல ஆன்லைன் வகுப்பு கூட நடக்கிறதில்ல. அதுக்காக நிதியுதவி கோரி ஒவ்வொரு கிராமப் பள்ளிகளிலும் புத்தகங்கள் கொடுத்து ஆசிரியர்கள் மற்றும் எங்களின் தன்னார்வலர்கள் வழியா பசங்களை படிக்க வைக்கிறோம். இதுவரை 15 மாவட்டங்கள்ல உள்ள 50 கிராமங்கள்ல 2 ஆயிரம் புத்தகங்கள் கொடுத்திருக்கோம். பள்ளிகளில் மட்டுமில்லாமல் இந்தப் புத்தகங்களை தெருக்களில் இருக்கிற குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கோம். எங்க தன்னார்வலர்கள் அந்தத் தெருவுல இருந்தாங்கனா அதுமாதிரி செய்றோம். இது சம்பந்தமா சமூகவலைத்தளத்துல போட்டதுமே நிறைய ஆசிரியர்கள் கேட்டாங்க.

‘துல்கல் டாக்ஸ்’ பண்ணும்போது நிறைய ஆசிரியர்கள் தொடர்பு கிடைச்சது. அவங்களே ‘எங்க பசங்களுக்கு புத்தகம் அனுப்ப முடியுமா... நாங்க பண்றோம்’னு சொன்னாங்க. அதனால ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கிட்ட புத்தகம் கொடுத்து குழந்தைகள்கிட்ட சேர்க்கச் செய்றோம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு புத்தகம் போய்ச் சேர்ந்திடும். அந்தக் குழந்தை ஒரு வாரத்துல ஒரு புத்தகத்தை படிச்சு முடிச்சதும், என்ன ஆக்டிவிட்டி பண்ணணும்ங்கிறதை ஆசிரியர்களும் நாங்களும் சேர்ந்து சொல்றோம். அதாவது, அந்தப் புத்தகத்தைப் படிச்சிட்டு அதுல எந்த கேரக்டர் பிடிச்சிருக்கோ அதையே ஒரு கதாபாத்திரமா அந்தக் குழந்தையை நடிக்கச் சொல்றது. அப்புறம், சில குழந்தைங்க அந்தப் புத்தகத்தைப் படிச்சிட்டு இயற்கையோடு இணைந்த செயல்பாட்டையும் மேற்கொள்றாங்க. அதையும் ஊக்குவிக்கிறோம்...’’ என்கிற கார்த்திகேயனைத் தொடர்ந்தார் எமிலி ரோஸ். ‘‘புத்தகத்தைப் பரிசா அளிப்போம் திட்டத்தைப் பண்ணும்போதே ‘வீதி நூலகம்’ என்கிற கருத்தாக்கத்தையும் கையிலெடுத்தோம். ரேக் மாதிரி செட் பண்ணி ஒரு தெருவுல வச்சிட்டா குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் வந்து படிக்கலாம்னு தோணுச்சு. உடனே தொடங்கினோம். இப்ப கொரோனா இருக்கிறதால இந்த வீதி நூலகத்துல இருந்து நூலை வீட்டுக்கு எடுத்திட்டுப் போய் படிக்கிறாங்க. இதைப் பார்த்துக்க சில தன்னார்வலர்கள் இருக்காங்க. இந்த கான்செப்ட் சிறப்பா நடந்திட்டு இருக்கு...’’ என்கிற எமிலியைத் தொடர்ந்தார் ஓவியரான மரியன் பிரிட்டோ. ‘‘நாங்க நூலகம் தவிர்த்து ‘அன்யா பவுண்டேஷன்’னு ஒரு தன்னார்வல அமைப்புடன் இணைஞ்சு செவிகள்னு ஒரு ஹெல்ப்லைன் தொடங்கி யிருக்கோம்.

இது அவங்களுடைய பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்ற ஹெல்ப்லைன். அப்புறம், ‘விரல் மொழியர்’னு இந்தியாவில் முதல்முறையாக கண்பார்வையற்றவர்கள் தங்களின் திறமைகளை வெளிக் கொணரும் வகையில் அவர்களே உருவாக்கிய மாத இதழுக்கு நாங்க பிழைதிருத்தமும், வடிவமைப்பும் பண்ணிக் கொடுக்குறோம்...’’ என்கிறார் மரியன். ‘‘இப்ப நாங்க ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்குள்ள குழந்தைகளின் திறன்களை வளர்க்கிறதுக்கான விஷயங்களை முன்னெடுக்கலாம்னு இருக்கோம். அப்புறம், ‘துல்கல் நூலக’த்தைக் கொண்டு வரும்போதே அங்க குழந்தைகள் நாடாளுமன்றத்தையும் உருவாக்கப் போறோம். பசங்க அவங்க பிரச்னைகளை சுயமாவே பேசித் தீர்த்துப்பாங்க. அல்லது தீர்த்துக்க கத்துப்பாங்க என்பதற்காக இந்த ஐடியா. அடுத்து, பசங்களுக்குனு ஒரு பிரசுரம் கொண்டு வரலாம்னு இருக்கோம். அதாவது, பசங்களே சொந்தமா புத்தகம் எழுதுகிற மாதிரி கொண்டு வரலாம்னு நினைக்கிறோம். எங்க முக்கிய குறிக்கோளே நெட்வொர்க் ஆஃப் லைப்ரரியை ஏற்படுத்துறதுதான். இந்தியா முழுவதும் கிராமங்கள், பழங்குடி பகுதிகள்ல நூலகங்கள் ஏற்படுத்தணும். அந்த நூலகங்கள்ல உள்ள நூல்களை மாத்திக்கணும். அப்ப எல்லா நூல்களும் எல்லோராலும் படிக்க முடியும். உதாரணத்துக்கு, விழுப்புரமும், காஞ்சிபுரமும் அருகருகே இருக்குற மாவட்டங்கள். இப்ப இந்த ரெண்டு மாவட்ட கிராமக் குழந்தைகளும் புத்தகங்களை மாத்திக்கலாம். அந்தப் பசங்க படிச்ச புத்தகங்கள் இந்தக் குழந்தைகளின் கைகளுக்கு வந்திடும். அதேமாதிரி இந்தக் குழந்தைகள் பயின்ற புத்தகங்கள் அந்தக் குழந்தைகளின் கைகளுக்குப் போகும். நெட்வொர்க் ஆஃப் லைப்ரரிங்கிறது அதுதான். அடுத்து, நடமாடும் நூலகம் மாதிரி பண்ணலாம்ங்கிற ஐடியாவும் இருக்கு. பள்ளிகள் இல்லாத இடங்கள்ல இந்த நடமாடும் நூலகம் செயல்படுற மாதிரி பண்ணப் போறோம்...’’ என எதிர்காலக் கனவுகளை விவரிக்கின்றனர் ‘துல்கல்’ அமைப்பினர்.

தொகுப்பு: பேராச்சி கண்ணன்

Tags : districts ,villages ,village schools , 15 Districts, 50 Villages., Village School, Library
× RELATED மதுரை உட்பட பல மாவட்டங்களில் கனமழை 10 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது