×

ஒருவருக்கு கூட தண்டனை பெற்று தரவில்லை: பெயரளவில் செயல்படும் லஞ்ச ஒழிப்புத்துறை

புதுச்சேரி: புதுவையில் பெயரளவில் செயல்பட்டு வரும் லஞ்ச ஒழிப்புத்துறையில் கடந்த 6 ஆண்டுகளில் 2 சதவீத வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு கூட தண்டனை பெற்றுதரவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அம்பலமாகியுள்ளது.

புதுச்சேரியில் தற்பொழுது பொதுமக்கள் தொடர்புடைய அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் பெருகி உள்ளது. இதனை தடுக்க வேண்டிய லஞ்ச ஒழிப்புத்துறை திறனற்ற நிலையில் பெயரளவில் இயங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்பு சம்மந்தமாக பெறப்பட்ட புகார் மனுக்கள், பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் தண்டனை பெற்றவர்கள் விபரம் குறித்து இந்திய தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தகவல்கள் பெறப்பட்டது. அதில், கடந்த 2015ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை மொத்தம் 146 புகார் மனுக்கள் பெறப்பட்டதாகவும், இதில் 3 புகார் மனுக்கள் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், ஒருவருக்குக்கூட தண்டனை பெற்றுத் தரவில்லை எனவும் தகவல் அளித்துள்ளனர். இதன் மூலம் புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத் துறை சம்பிரதாயத்திற்கு செயல்பட்டு வருவது தெரியவருகிறது.

2018ல் பெறப்பட்ட தகவலின்படி, கடந்த 22 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் ஆண்டிற்கு 3 லட்சத்து 6 ஆயிரத்து 108 ரூபாய் வாடகை செலுத்தி இயங்கி வருவதும், ஆய்வாளர், காவலர்கள் என 19 பேர் பணியாற்றி வரும் லஞ்ச ஒழிப்புத்துறையில் கடந்த 6 ஆண்டுகளாக 146 புகார் மனுக்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளது. இதில் 3 வழக்குகள் அதாவது 2.05% சதவீத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த புகார் மனுக்கள் மீது விசாரணை செய்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரவும் முனைப்பு கட்டவில்லை. குறிப்பாக, விசாரணையை காலத்தோடு முடிக்காமல் ஆண்டு கணக்கில் தாமதம் செய்கின்றனர். இதனால் புகாரின் உண்மைத்தன்மை நீற்றுப்போகும் நிலை ஏற்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பி விடுகின்றனர்.

இதுபோல் போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்த பல உயர் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த 20 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்று வரை விசாரணை முழுமை அடையவில்லை. இதனால் பொதுமக்கள் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் தர விருப்பம் இல்லாமல் சென்னையில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தையும், மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தையும் நாடுகின்றனர்.

இதுகுறித்து ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி கூறியதாவது: புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறையானது பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டவில்லை. இதனால் குற்றம் சட்டப்பட்ட நபர்கள் தண்டனை பெறாமல் தப்பி விடுகின்றனர். அதேபோல், லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தைக்கூட கடந்த 9 ஆண்டுகளாக பொது அரங்கில் நடத்தாமல் ஒரு சம்பிரதாய விழாவை போல் நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக கவர்னர், முதல்வர், தலைமை செயலர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளேன். அவர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை மீது சிறப்பு கவனம் செலுத்தி வரும் புகார் மீது உரிய காலத்தில் விசாரணை செய்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் புதுச்சேரி மக்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மீது நம்பிக்கை பிறக்கும்’ என்றார்.

Tags : bribery department , Corruption Eradication Department
× RELATED சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக...