×

வடகிழக்கு பருவமழை அறிகுறியே இல்லை... பிசான நெல் சாகுபடி கைகூடுமா? எதிர்பார்ப்பில் நெல்லை, தூத்துக்குடி விவசாயிகள்

நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை அறிகுறி இதுவரை இல்லை. கார் பருவ நெல் சாகுபடி கைவிட்டுப் போன நிலையில் பிசான நெல் சாகுபடி குறித்த காலத்தில் துவங்குமா? என நெல்லை, தூத்துக்குடி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். நெல்லை மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பாபநாசம் அணை அமைந்துள்ளது. இந்த அணை மூலம் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலங்களும் என மொத்தம் 86 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. பொதுவாக வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து இருக்கும். எனவே நவம்பர், டிசம்பர் மாதங்களில் பாபநாசம் அணை நிரம்பிவிடும்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலமாகும். அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் வடகிழக்கு பருவமழை காலமாகும். தென்மேற்கு பருவமழை காலத்தில் கார் பருவ நெல் சாகுபடியும், வடகிழக்கு பருவமழை காலத்தில் பிசான பருவ நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். பாபநாசம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் நெல்லை மாவட்டத்தில் வடக்கு, தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், நெல்லை கால்வாய், பாளையங்கால்வாய் ஆகிய 7 கால்வாய்கள் மூலமும், தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மேலக்கால், கீழக்கால், வைகுண்டம் வடகால், தென்கால் என 4 கால்வாய்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு சென்றடைகிறது.

கடந்த ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்தது. அப்போது பாபநாசம் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருந்ததால் குடிநீர் தேவையின் அவசியம் கருதி ஜூன் 1ம் தேதி கார் பருவ நெல் சாகுபடிக்கு அணை திறக்கப்படவில்லை. ஆனால் ஜூலை 27ம் தேதிக்கு பிறகு துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை நல்ல மழை பெய்தது. இதனால் பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியைத் தாண்டியது. எனினும் மழையின் தாமதத்தால் தாமிரபரணியின் பெரும்பான்மை பாசன பகுதிகளில் கார் பருவ நெல் சாகுபடி கைவிடப்பட்டது. தற்போது வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். பொதுவாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை அக்.18ம் தேதி துவங்கி விடும். ஆனால் அக்.28ம் தேதி தான் வடகிழக்கு பருவமழை துவங்குவதாக வானிலை மையம் கணித்துள்ளது. எனினும் வடகிழக்கு பருவமழை துவங்கி விடும் என்ற நம்பிக்கையில் பிசான பருவ நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் துவங்கியுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் நிலத்தை சமன்படுத்தி உழவு அடிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

நேற்று காலை நிலவரப்படி பாபநாசம் அணை நீர்மட்டம் 111.15 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 120.67 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 75.10 அடியாகவும் உள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 421.07 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 804.75 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 46 கனஅடி நீர் வருகிறது. அணை மூடப்பட்டுள்ளது. தற்போது பாபநாசம் அணையில் 100 அடிக்கு மேல் நீர் இருப்பு உள்ள நிலையில் பிசான பருவ நெல் சாகுபடிக்கு எப்போது அணை திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து தாமிரபரணி கோட்ட மணிமுத்தாறு பெருங்கால் பாசன விவசாயிகள் சங்க உறுப்பினர் சொரிமுத்து கூறுகையில், நெல்லை, ெதன்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நெல் சாகுபடிதான் பிரதான விவசாயம். பாபநாசம் அணையின் மூலமே 3 மாவட்டங்களிலும் பிசான நெல் சாகுபடி விவசாயம் நடந்து வருகிறது. கடந்த ஆண்டும் இதே சூழ்நிலை நீடித்த போதிலும் பாபநாசம் அணையில் பிசான நெல் சாகுபடிக்காக அக்டோபர் மாதத்தில் அணை திறக்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள் நாற்றங்கால் அமைத்து உரிய நேரத்தில் நெல் சாகுபடி பணிகளை தொடங்கினர். அக்டோபர் மாதம் பிசான சாகுபடி தொடங்கியதால் பிப்ரவரி மாதத்திலேயே அறுவடை செய்ய முடிந்தது. தற்போது பாபநாசம் அணையில் 100 அடிக்கும் மேல் நீர் இருப்பு உள்ளது. முன்பு மாதந்தோறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. அப்போது விவசாயிகளின் குறைகளை கலெக்டரிடம் நேரடியாக தெரிவித்து தீர்வு காண இயலும். தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குறை தீர்க்கும் கூட்டம் கடந்த முறைதான் காணொலியில் நடத்தப்பட்டது. எனினும் விவசாயிகளின் குறைகளை முழுவதுமாக தெரிவிக்க முடியவில்லை. இதனால் கலெக்டரை நேரடியாக சந்தித்து, பிசான நெல் சாகுபடிக்கு உடனே பாபநாசம் அணையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு. அதற்கு உரிய நேரத்தில் தண்ணீர் கிடைத்தால்தான் பயிர் விளைவிக்க முடியும் என்பது மட்டும் நிதர்சனம்.

அனுமதி கேட்டு அரசுக்கு கடிதம்

பொதுப்பணித்துறை தாமிரபரணி கோட்ட அதிகாரிகள் கூறுகையில், பாபநாசம் அணையில் தற்போது 100 அடியைத் தாண்டி நீர் இருப்பு உள்ளது. எனினும் மார்ச் 31ம் தேதி வரை 5 மாதங்களுக்கும் மேலாக பிசான நெல் சாகுபடிக்கு தண்ணீர் வழங்க வேண்டும். அதன் பிறகு கோடை காலம் என்பதால் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் இருப்பு வைக்க வேண்டி உள்ளது. எனவே பாபநாசம் அணையை பிசான நெல் சாகுபடிக்கு விரைவில் திறக்க திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பாக தமிழக அரசுக்கும் கடிதம் எழுதியுள்ளோம். தமிழக முதல்வர் உத்தரவிட்டதும் அணை திறக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

3 மாதங்களில் 60 சதவீதம் மழை

நெல்லை மாவட்டத்தின் வழக்கமான மழையளவு 814.80 மிமீ. இதில் அக்டோபர் மாதத்தில் 166 மிமீ, நவம்பர் மாதத்தில் 208.20 மிமீ, டிசம்பர் மாதத்தில் 111.60 மிமீ என 3 மாதங்களில் மட்டும் 485.80 மிமீ, அதாவது ஓராண்டு மழையளவில் 60 சதவீதம் கிடைத்து விடும். ஆனால் கடந்த ஆண்டு 2019ல் அக்டோபர் மாதத்தில் 261.77 மிமீ, நவம்பர் மாதத்தில் 242.98 மிமீ, டிசம்பர் மாதத்தில் 181.11 மிமீ என மூன்று மாதங்களில் மட்டும் 685.21 மிமீ மழை கிடைத்தது. இதன் மூலம் கடந்த ஆண்டு 1050.10 மிமீ மழையளவு பதிவானது. ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக்கான அறிகுறி இதுவரை இல்லாதது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Tags : Nellai ,Thoothukudi , Cultivation, paddy, Thoothukudi, farmers
× RELATED ஊராட்சி தலைவர்களுக்கு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பயிற்சி