×

நெல்லையில் பரபரப்பு - குளத்தில் கிடந்த வெளிநாட்டு துப்பாக்கி: போலீசார் தீவிர விசாரணை

நெல்லை: நெல்லை டவுனை அடுத்துள்ள கண்டியப்பேரி குளத்தில் கரையோரம் மர்ம பார்சல் கிடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதனையறிந்த தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு கிடந்த பார்சலை போலீசார் கைப்பற்றி பிரித்து பார்த்தனர். அதில் பிஸ்டல் (கைத் துப்பாக்கி) மற்றும் இரண்டு தோட்டாக்கள் இருப்பது தெரியவந்தது. 7 எம்எம் ரகத்தை சேர்ந்த இந்த நவீன ரக துப்பாக்கி, ஜப்பானில் கடந்த 2018ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் ஆகும். மேலும் லேசாக துருப்பிடித்து உள்ளது. ஆனால் அவற்றினை சுத்தப்படுத்தி இப்போதும் நல்ல முறையில் பயன்படுத்தும் வகையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து நெல்லை டவுன் போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கைப்பற்றப்பட்ட பிஸ்டலும், இரு தோட்டாக்களும் மாநகர ஆயுதப்படையில் ஒப்படைக்கப்பட்டு அங்குள்ள வைப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் பிஸ்டலை இன்று (27ம் தேதி) ஆயுதப்படை நிபுணர்கள் ஆய்வு செய்து அவற்றை நெல்லை தாசில்தார் பகவதி பெருமாளிடம் ஒப்படைக்கப்படுகிறது. பின்னர் அவை பாதுகாப்பாக கருவூலத்தில் வைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து போலீசார் மற்றும் உளவுத்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குளத்தில் வீசப்பட்ட பிஸ்டல் (கைத்துப்பாக்கி) யாருடையது? எப்படி கொண்டு வரப்பட்டது என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

கூலிப்படையினர் பாதுகாப்பிற்காக வைத்திருந்து இருக்கலாம். இவ்விவகாரம் வெளியே தெரிந்ததால், சம்பந்தப்பட்டவர்கள் பிஸ்டலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி குளக்கரையில் புதைத்து வைத்து இருக்கலாம் என தெரிகிறது. நாய் தோண்டி வெளியே போட்டதால் பிஸ்டல் விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது. கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கியின் ரகம் மற்றும் அதன் எண் மூலம் அந்த துப்பாக்கி யாருக்கு சொந்தமானது. எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். துப்பாக்கி யாருடையது என்பதை விரைவில் கண்டுபிடித்து விடுவோம், என்றனர்.

நக்சல்களிடம் வாங்கியதா?

இந்தியாவில் இதுபோன்ற பிஸ்டல்கள் சிறிது பெரிதாக இருக்கும். 9 எம்எம் ரகம் பிஸ்டல் ரகங்கள் மட்டுமே இங்கு தயாரிக்கப்பட்டு வருகிறது. கண்டியப்பேரி குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட 7 எம்எம் போன்ற பிஸ்டல் ரகங்கள் ஜெர்மன், தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா மற்றும் ரஷ்யாவில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. இந்த பிஸ்டல் ரகங்களை கடந்த சில ஆண்டுகளாக நக்சல்கள் மற்றும் தீவிரவாதிகளிடம் இருந்து அதிக விலை கொடுத்து தென்மாநில பகுதியை சேர்ந்தவர்கள் ரகசியமாக வாங்கி வருவதாகவும் உளவுத்துறையை சேர்ந்த போலீசார் தெரிவித்தனர்.

Tags : Nellai ,pond ,investigation , Nellai, gun, police, investigation
× RELATED திருவொற்றியூரில் பரபரப்பு: சிறுமியை மணந்த வாலிபர் போக்சோவில் அதிரடி கைது