அருவிகளில் தண்ணீர் கொட்டியும் வெறிச்சோடி கிடக்கின்றன: குற்றாலத்தில் உணவுக்காக குரங்குகள் தவிப்பு

நெல்லை: குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டியும் 144 தடை காரணமாக கடந்த 7 மாதங்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதியில்லை. இதனால் அருவிப்பகுதிகள் வெறிச்சோடி கிடப்பதால், இங்கு வசிக்கும் குரங்குகள் உணவுக்கு வழியின்றி அல்லாடுகின்றன. ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள், குற்றால சீசன் காலமாகும். இங்குள்ள அருவிகளுக்கு மூலிகைகளில் தவழ்ந்து வந்து கொட்டும் தண்ணீரில் குளித்தால் உடல் சூடு தணியுமே தவிர வேறு எந்த தொல்லையும் வராது. குற்றால சீசனை அனுபவித்தவர்கள், வருடம் தவறாமல் வந்து செல்வது வழக்கம். சீசன் காலத்தில் விடுமுறை நாட்களில் மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து குளித்து செல்வார்கள்.

இதற்காகவே குற்றாலம் ஐந்தருவி சாலை மற்றும் பழையகுற்றாலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தனி வீடுகளும், குடில்களும், விடுதிகளும் அமைந்துள்ளன. குற்றாலத்தின் மற்றொரு தனிச்சிறப்பு குரங்குகள் ஆகும். குற்றாலம் சாலைகளிலும், மரங்களிலும், பாறைகளிலும், கட்டிடங்களும் குடும்பம், குடும்பமாக குரங்குகள் உலாவும். சீசனுக்கு வரும் மக்கள் தரும் உணவுகளை வாங்கி சாப்பிட்டு பேரானந்தம் அடையும். குற்றாலத்தில் குரங்குகளுக்கு உணவு வழங்குவதற்காகவே பலர் இங்கு வந்து முகாமிட்டு செல்கின்றனர். இந்தாண்டு கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அருவிகளில் குளிப்பதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. கடந்த 7 மாதங்களாக இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருவதால், குற்றாலம் அருவிப்பகுதிகள் வெறிச்சோடி கிடக்கின்றன. சீசன் கால கடைகளும் திறக்கப்படவில்லை.

சீசன் நாட்களை கடந்தும் கடந்த சில வாரங்களாக அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டத்தான் செய்கிறது. பெரும்பாலான நாட்களில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டினாலும், மக்கள் யாரையும் காணவில்லை என்பதால் குரங்குகளுக்கும் இந்தாண்டு புது அனுபவமாகத்தான் இருந்துள்ளது. இதன் காரணமாக உணவு கிடைக்காமல் குரங்கு கூட்டங்கள் அல்லாடி வருகின்றன. விலங்கின ஆர்வலர்கள், சில நாட்கள் உணவு வந்து கொடுத்தாலும், பெரும்பாலான நாட்களில் அவைகளுக்கு உணவு கிடைக்காமல் பரிதவிக்கின்றன.

வழக்கமாக மக்கள் தலைகளாக காணப்படும் விடுதிகள், ரிசார்ட்டுகள் மற்றும் பஸ் நிலையங்களில் சுற்றுலா பயணிகளை எதிர்பார்த்து குரங்குகள் கூட்டம் கூட்டமாக வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றன. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதாலும் கொடைக்கானல், ஓகேனக்கல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாலும், குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதியளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: