கூடலூர் அருகே பெண் புலி கூண்டில் சிக்கியது

கூடலூர்: நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா ஒட்டிய எல்லைப்பகுதி கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ளது சுல்தான் பத்தேரி. இங்குள்ள சியம்பம் கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலை சுமார் ஒன்பது வயதுள்ள பெண் புலி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. சியம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள அம்பத்தாறு, மூனானக் குழி, இருளாம், காலடி ஜங்ஷன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கிராம மக்கள் வளர்த்து வந்த ஆடு, மாடுகளை புலி ஒன்று வேட்டையாடி வந்தது. புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து,புலி நடமாட்டம் உள்ள பகுதியில் கூண்டு வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் அதிகாலை புலி கூண்டில் சிக்கியிருப்பதை வனத்துறையினர் பார்த்தனர். கூண்டுடன் அங்கிருந்து புலியை மீட்டு முத்தங்கா சரணாலய பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்துள்ளனர். புலியை வனப்பகுதிக்குள் விடுவதா? அல்லது மிருக காட்சி சாலைக்கு கொண்டு செல்வதா? என்பது குறித்து தேசிய புலிகள் ஆணையத்திடம் கிடைக்கும் உத்தரவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூண்டில் சிக்கிய 9 வயதான பெண் புலி, வயது முதிர்வு காரணமாக வனத்தில் வேட்டையாட முடியாமல் கிராமங்களுக்கு வந்து ஆடு மாடுகளை கொன்று தின்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: