கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு: பல்வேறு திட்டங்களை பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்

சென்னை: திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது கொளத்தூர் தொகுதியில் நடந்து வரும் பல்வேறு பணிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களை மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். முதற்கட்டமாக, 65வது வார்டுக்கு உட்பட்ட வீனஸ் நகர் 5வது குறுக்கு தெருவில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக விடுதி  கட்டப்படும் இடத்தை ஆய்வு செய்தார். பின்னர், ஜம்புலிங்கம் மெயின் ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.40 லட்சத்தில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணியை துவக்கி வைத்தார்.

வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.43 லட்சம் மதிப்பில், 64வது வார்டுக்கு உட்பட்ட தாமரை ஹரிதாஸ் தெருவில் தாமரைக்குளத்தை சுற்றி அமைக்கப்பட்ட தடுப்பு வேலியை திறந்து வைத்தார். 69வது வார்டுக்கு உட்பட்ட சின்னக்குழந்தை மெயின் தெரு, மடுமா நகரில் ஆண்களுக்கான உடற்பயற்சி கூடத்திற்கு ரூ.15 லட்சத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள உடற்பயற்சி கருவிகளை பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.11.05 லட்சத்தில் 66வது வார்டுக்கு உட்பட்ட ஜவஹர் நகர், 2வது குறுக்கு தெருவில் ஆண்களுக்கான உடற்பயற்சி கூடத்திற்கு புதிதாக பொருத்தபட்டுள்ள உடற்பயற்சி கருவிகளை பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ஆய்வின்போது திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி எம்எல்ஏ, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ, கலாநிதி வீராசாமி எம்பி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: