×

பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி; மணலி புதுநகரில் பரபரப்பு

திருவொற்றியூர்: மணலி புதுநகரில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய முயன்ற 2 பேர் விஷ வாயு தாக்கி மயக்கமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருவொற்றியூர் மதுரா நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (40). மணலி புதுநகர் 1வது பிளாக் மார்க்கெட் அருகே கறிக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை இவரது கடை முன்பு பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால், மேன்ஹோல் வழியாக கழிவுநீர் வழிந்தோடியது. கடை முன்பும் கழிவுநீர் தேங்கியதால் வாடிக்கையாளர்கள் முகம் சுழித்தனர்.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என கூறப்படுகிறது. இதனால் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய, அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தர்மராஜ் (50) என்பவரை அழைத்து வந்தார். அவர், உள்ளே இறங்கி கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது, விஷ வாயு தாக்கியதில் அவர் திடீரென மயக்கமடைந்து பாதாள சாக்கடைக்குள் விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வேல்முருகன், அவரை காப்பாற்ற பாதாள சாக்கடைக்குள் இறங்கினார். சிறிது நேரத்தில் அவரும் மயக்கமடைந்து உள்ளே விழுந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர்  உடனே தீயணைப்பு நிலையத்திற்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மணலி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரையும் கயிறு கட்டி வெளியே கொண்டு வந்தனர். பின்னர் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர்களை சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மணலி புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Manali New Town , 2 fainted after being poisoned while repairing a sewer blockage: admitted to hospital; Excitement in Manali New Town
× RELATED சாணார்பட்டி அருகே பரபரப்பு: விவசாயி வீட்டில் வெடிகுண்டு வீச்சு