சிகாகோ விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு சென்னை விமான நிலையத்தில் பயணிகள் 24 மணிநேரம் தவிப்பு: போராட்டத்தில் ஈடுபட்டனர்

சென்னை: ஏர் இந்தியா விமானம் அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து டெல்லி வழியாக நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அந்த விமானம் மீண்டும் இரவு 8.30 மணிக்கு சென்னையிலிருந்து ஐதராபாத் வழியாக சிகாகோவிற்கு புறப்பட்டு செல்லும். இதற்காக, சென்னையில் 128 பயணிகள், 8 விமான சிப்பந்திகள் உள்பட மொத்தம் 136 பேருடன் விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாராகும் முன், விமானி இயந்திரங்களை சரிபார்த்தபோது, இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்தார்.

இதன் காரணமாக, விமானம் காலதாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. விமான பொறியாளர்கள் விமான இயந்திரத்தை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், நள்ளிரவு 12 மணியாகியும் பணி முடியவில்லை. இதையடுத்து விமான பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, விமானத்திற்குள் போராட்டம் நடத்தினர். எனவே, பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு, விமானநிலைய பயணிகள் ஓய்வு பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். இருப்பினும் அதிகாலை 4 மணி வரை விமானத்தை சரிசெய்ய முடியவில்லை. எனவே, விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதில் செல்ல வேண்டிய பயணிகள் அனைவரும் சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், விமானம் பழுதுபார்க்கப்பட்டு நேற்று மாலை 4 மணிக்கு மேல் மீண்டும் சென்னையிலிருந்து ஐதராபாத் வழியாக சிகாகோ நகருக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் மீண்டும் தயாராகினர். ஆனால், மீண்டும் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டு, இரவு 8.30 மணிக்கு மாற்று விமானத்தில் சிகாகோ நகருக்கு புறப்பட்டுச் சென்றனர். இயந்திர கோளாறு காரணமாக, விமான பயணிகள் 24 மணி நேரம் தவித்துள்ளனர். விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டு 136 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Related Stories: