திருமாவளவனை முற்றுகையிட முயற்சி பாஜக - விசிக இடையே மோதல்: வேன் கண்ணாடி உடைப்பு; 14 பேர் கைது

கோபி: திருமாவளவனை முற்றுகையிட முயன்றதால் கோபியில் பா.ஜ.க. மற்றும் வி.சி.க.வினர் இடையே மோதல் ஏற்பட்து. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்திருமாவளவன் சில நாட்களுக்கு முன் பெண்கள் குறித்து கூறிய கருத்துக்கு பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட கட்சியினர் மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருமாவளவன் கோபி அருகே கவுந்தப்பாடி கந்தசாமியூரில் நண்பர் மகனின் திருமண நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்க நேற்று வந்தார். இதையறிந்த பா.ஜ.கவினர் அங்கு வந்து அவரை முற்றுகையிட முயன்றனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது பா.ஜ.க.வினர் திருமாவளவனை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 50க்கும் மேற்பட்டவர்கள் அங்கு திரண்டனர். இருதரப்பினரும் மாறி மாறி கோஷம் எழுப்பினர். இதையடுத்து போலீசார் பா.ஜ.க. வினரை கைது செய்ய, வேனை கொண்டு வந்தனர். அது பா.ஜ.க.வினர் வேன் என கருதிய வி.சி.கட்சியினர் அதன் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் வேன் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதையடுத்து இருதரப்பினரையும் போலீசார அப்புறப்படுத்தினர். சிறிது தூரத்தில் நின்று பா.ஜ.கவினர் திருமாவளவன் மற்றும் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வினர் 14 பேரை கைது செய்து, வேனில் ஏற்றிச் சென்றனர். பின்னர் திருமாவளவன் அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்றார். இந்த சம்பவத்தால் கவுந்தப்பாடியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு நிலவியது. இதனிடையே, பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.பி.யிடம் வி.சி.கட்சியினர் புகார் அளித்தனர்.

Related Stories: