×

ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் முடிந்து அரசு பஸ்சில் 12,000 பயணிகள் சென்னை திரும்பினர்

சென்னை: ஆயுதபூஜை தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு சென்றவர்களில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எஸ்இடிசி பஸ்களில் முன்பதிவு செய்து சென்னைக்கு திரும்பினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள், சென்னையில் பணி நிமித்தமாக தங்கியுள்ளனர். இவர்கள் தொடர் விடுமுறையின் போது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்தவகையில் ஆயுதபூஜை கொண்டாட்டத்தையொட்டி கடந்த 23ம் தேதி இரவு முதல் சொந்த ஊர்களுக்கு செல்லத்துவங்கினர். இதில் அரசு விரைவுப்போக்குவரத்துக்கழக பஸ்களில் மட்டும் 15,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து பயணித்தனர். மேலும் பலர் தனியார் ஆம்னி பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணித்திருந்தனர். கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் அரசு விரைவு பஸ்களில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

இந்நிலையில் ஆயுதபூஜை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற பலரும் மீண்டும் சென்னை திரும்ப துவங்கியுள்ளனர். பல்வேறு ஊர்களில் இருந்து நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை சென்னை வருவதற்கு மட்டும் 12,000க்கும் மேற்பட்டோர் எஸ்இடிசி பஸ்களில் முன்பதிவு செய்திருந்தனர். அவர்கள் படிப்படியாக கடந்த இரண்டு நாட்களாக இயக்கப்பட்ட பஸ்களில் சென்னைக்கு வந்தனர். இதுகுறித்து அரசு விரைவுப்போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஆயுதபூஜை தொடர் விடுமுறை முடிந்ததையடுத்து மீண்டும் சென்னை வருவதற்கு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து, திரும்பியுள்ளனர். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் பல்வேறு காரணங்களால் தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : passengers ,celebrations ,Armed Puja ,Chennai , After the Armed Puja celebrations, 12,000 passengers returned to Chennai in a government bus
× RELATED தீபாவளி கொண்டாட்டம் முடிந்த நிலையில்,...