தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவேன் தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை: பாஜ தலைவர் எல்.முருகன் பேட்டி

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை. தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்று பாஜ தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். தமிழக பாஜ சார்பில் வருகிற 6ம் தேதி முதல் ஆறுபடை வீடு “வெற்றிவேல் யாத்திரை” நடைபெற உள்ளது. இந்த யாத்திரைக்கான காப்புக்கட்டு விழா தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. பாஜ தலைவர் எல். முருகன் நிர்வாகிகளுக்கு கைகளில் காப்பு கட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம், பொது செயலாளர் கருநாகராஜன், எம்.என்.ராஜா, இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம், மாநில செயலாளர் டால்பின் ஸ்ரீதர், மாவட்ட பொறுப்பாளர்  செம்பாக்கம் அ.வேதசுப்பிரமணியன், மீனவரணி தலைவர் சதீஷ்குமார், ஏ.என்.எஸ்.பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து முருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜ சார்பில் வருகிற 6ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை வெற்றி யாத்திரை தொடங்க உள்ளது. திருத்தணியில் ஆரம்பிக்கும் இந்த யாத்திரை திருச்செந்தூர் வரையிலும் நடைபெறுகிறது. சட்டப்பேரவை தேர்தலில் நிச்சயமாக நான் போட்டியிட போவது இல்லை. சட்டப்பேரவைக்கு எனது சகோதரன், சகோதரியை வெற்றி பெற செய்ய தமிழகம் முழுவதும் சென்று பிரசாரத்தில் ஈடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கர்நாடக இசை கலைஞர் மோகன் வைத்யா, பிரபல குணசித்திர நடிகர் காளிதாஸ் ஆகியோர் எல்.முருகன் முன்னிலையில் பாஜவில் இணைந்தனர்.

Related Stories: