சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானது கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: ஓபிசி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை மறுப்பது என்பது சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானது என பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்): மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தருமாறு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிற தீர்ப்பு, சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான, பெரும் அதிர்ச்சி அளிக்கின்ற தீர்ப்பு ஆகும். மதிமுக சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முத்தரசன் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்): உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓபிசி மாணவர்களின் நம்பிக்கை தகர்த்துவிட்டது. மனுவாத சிந்தனையில் மத்திய அரசு இட ஒதுக்கீடு, சமூக நீதிக் கொள்கைக்கு மாபெரும் துரோகமிழைத்துள்ளது. இந்த அநீதிக்கு எதிராக சமூக நீதி, ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து தீவிரப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம்.

திருமாவளவன்(விசிக தலைவர்) : மருத்துவ இடஒதுக்கீடு விஷயத்தில் தமிழ்நாட்டின் ஒருமித்த கருத்தை மத்திய அரசுக்குத் தெரிவிக்கவும் எடுக்கப்படவேண்டிய சட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கவும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் எனத் தமிழக முதலமைச்சரை வலியுறுத்துகிறோம்.

டிடிவி.தினகரன் (அமமுக பொதுச் செயலாளர் ): பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டு உரிமையை காப்பாற்றுவதற்கான சட்டப்படியான நடவடிக்கைகளில் இனியாவது பழனிசாமி அரசு அக்கறையோடு செயல்பட வேண்டும்.

கி.வீரமணி (திக தலைவர்): மக்கள் மன்றத்தைத் திரட்டி அனைவரும் ஒருமித்த குரலில், ஓரணியில் திரண்டு சமூக நீதிக்காகப் போராடுவதுதான் ஒரே வழி. அதுபற்றி அனைத்து கட்சிகளும், அமைப் புகளும் சிந்திக்க வேண்டும்.

கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவை சீர்குலைத்த  மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழகத்தில் உரிய பாடம் புகட்டுவதன் மூலமே சமூக  நீதியை பாதுகாக்க முடியும்.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்):உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, எதிர்பார்பிற்கு மாறாக இந்த வருடம் இட ஒதுக்கீட்டிற்கு வாய்பில்லை என்று அறிவித்து இருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

நெல்லை முபாரக்(எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர்): பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய ஒரு மாபாதக செயலை மத்திய அரசு செய்திருக்கிறது.

Related Stories: