×

மு.க.ஸ்டாலினை கொச்சைப்படுத்தி போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்: துரைமுருகன் எச்சரிக்கை

சென்னை:திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாகரிகமான, ஆக்கபூர்வமான, கண்ணியமான விமர்சனங்களை முன்வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற உயரிய அரசியல் பண்புகளை ஒவ்வொரு தொண்டனின் உள்ளத்திலும் பசுமரத்தாணி போல் பதிய வைத்து அரசியல் செய்தவர்கள் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும். அவர்களின் வழிநின்று, ணுவளவும் தரக்குறைவான விமர்சனங்களுக்கு இடம் அளிக்காமல் இந்தப் பேரியக்கத்தை நடத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின்.

ஆனால், ஆட்சியின் பதவிக்காலத்தின் முடிவு நெருங்கி தேர்தலைச் சந்திக்கும் நெருக்கடியில் இருக்கும் அதிமுக ‘அச்சடித்தவர் யார்’ என்ற பெயரே போடாமல் ஆங்காங்கே சுவரொட்டிகளை ஒட்டுவதும், திமுக தலைவர்கள் பேசாததைப் பேசியதாகத் திரித்து சமூகவலைதளங்களில் பரப்புவதும் தரங்கெட்ட அரசியலின் உச்சக்கட்டம். கோவை, குனியமுத்தூர் பகுதியில் மட்டும் இதுபோன்ற சுவரொட்டிகளை அதிமுகவினரும் கிழிக்காமல் போலீசாரும் கிழிக்காமல் வேடிக்கை பார்த்ததால், திமுக தொண்டர்களே ஆவேசப்பட்டுப் போராடியிருக்கிறார்கள்.

அப்படி “பெயர் போடாமல்” “அநாகரிகமாக” மு.க.ஸ்டாலின் குறித்து சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் புகார் கொடுத்த திமுகவினர் மீதே வழக்குப் போட்டு கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருக்கிறது அங்குள்ள காவல்துறை. அப்படிப் பொய் வழக்குப் போடுவதற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டிருக்கிறார் என்பது சட்டவிரோதமானது. எஞ்சியிருக்கின்ற 6 மாதங்களில் அந்த அமைச்சர் உள்ளாட்சித்துறையை மட்டுமல்ல, காவல் துறையையும் குட்டிச்சுவராக்கி விடுவார் போலிருக்கிறது.முதல்வருக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம், திமுக இதுபோன்ற அநாகரிக அரசியலில் நம்பிக்கையில்லாத கட்சி.

ஆகவே இதுபோன்ற சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாது. பொறுப்புள்ள பதவியில் முதல்வராக இருக்கும் நீங்கள் வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள். இதுபோன்று தரக்குறைவான சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் மீது திமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும். திமுகவின் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும். அவ்வாறு போஸ்டர் ஒட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாவிட்டால் திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

Tags : MK Stalin ,Thuraimurugan , Struggle if no action is taken against those who slandered MK Stalin and put up posters: Thuraimurugan warns
× RELATED கையடக்க CPU-ஐ உருவாக்கிய மாதவுக்கு...