கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தொடர்ந்து கவலைக்கிடம்: எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை; முதல்வர், அமைச்சர்கள் நலம் விசாரித்தனர்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலே உள்ளார். அவருக்கு அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனைக்கு முதல்வர் எடப்பாடி மற்றும் மூத்த அமைச்சர்கள் சென்று டாக்டர்களை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் இறந்த தகவலை அறிந்து அவரிடம் நலம் விசாரிப்பதற்காக தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13ம் தேதி காலை சென்னையில் இருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திண்டிவனம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது அமைச்சர் துரைக்கண்ணுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த இரண்டு வாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனை சார்பில் நேற்று முன்தினம் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “எங்கள் மருத்துவமனையில் கடந்த 13ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக அமைச்சர் துரைக்கண்ணு (72) அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா உறுதியானது. அவருக்கு ஏராளமான இணை நோய்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்ததில் அவரது நுரையீரலில் 90 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவருக்கு எக்மோ, செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, துரைக்கண்ணுவின் உடல்நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் மாலை நேரில் சென்று விசாரித்தார். அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் ஆகியோரும் சென்றிருந்தனர்.

அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து மருத்துவர்களிடம் கேட்டனர். அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மோசமடைவதால் எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அமைச்சரின் உறவினர்களுக்கும் முதல்வர் ஆறுதல் கூறிவிட்டு சென்றார். இந்த நிலையில் நேற்றும் அமைச்சர் துரைக்கண்ணு தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நேற்று செய்தி வெளியானதை தொடர்ந்து மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், காமராஜ், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் நேற்று மதியம் காவேரி மருத்துவமனைக்கு சென்று, அவருக்கு சிகிச்ைச அளிக்கும் டாக்டர்களிடம் அமைச்சரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

இந்த நிலையில் அமைச்சர் துரைக்கண்ணு தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளதாக மருத்துவமனை சார்பில் மீண்டும் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காவேரி மருத்துவனையில் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட நிமோனியாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. அவருக்கு ஏற்கனவே உள்ள இணை நோய்கள் காரணமாக முக்கிய உடல் உறுப்புகள் சீராக செயல்படுவது சவாலாக உள்ளது. அதிகப்பட்ச உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 24 மணி நேர கண்காணிப்புக்கு பிறகே அமைச்சர் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து தெரிவிக்க முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: