தமிழகத்தில் இருந்து தக்காளி, வெங்காயம் நேரடி கொள்முதல்: கேரள அரசு கடிதம்

திருவனந்தபுரம்: தமிழகத்தில் இருந்து வெங்காயம், தக்காளி உட்பட உணவு பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய கேரளா தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் கடிதம் எழுதியுள்ளார். கேரள முதல்வர் பினராய் விஜயன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சமீபகாலமாக வெங்காயத்தின் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. வரத்து குறைவால் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் நலனை காக்கவும் கொள்முதல் மூலமாக அரசு இவ்விஷயத்தில் தீர்வு காண முடிவு செய்துள்ளது. கேரளாவை பொறுத்த வரை, காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விநியோகத்தில் மற்ற மாநிலங்களையே அதிகம் சார்ந்துள்ளது.

மத்திய அரசின் திட்டத்தின் படி தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட உணவுப் பொருட்களை மற்ற மாநிலங்களில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து கொள்ள முடியும். அதன்படி, தமிழக விவசாயிகள் மற்றும் வேளாண் உற்பத்தி நிறுவனங்கள் மூலம் கேரளாவின் விநியோக அமைப்புகள் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் இருந்து உணவு பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இதே போல, மகாராஷ்டிரா மாநில அரசுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Related Stories:

>