பீகாருக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்: மத்திய அமைச்சர் விளக்கம்

புவனேஸ்வர்: ‘பீகாருக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்’ என மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கி விளக்கமளித்துள்ளார். பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அம்மாநில மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பாஜ தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, கொரோனா பாதிப்பை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதற்கிடையே, தமிழகம், மத்தியபிரதேசம், அசாம், புதுச்சேரி மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கப்படுவதாக அறிவித்தன. இதனால், மத்திய அரசே கொரோனா தடுப்பூசியை இலவசமாக மக்களுக்கு தருமா, இல்லை பீகார் மக்களுக்கு மட்டுமா என்பதில் குழப்பம் நிலவி வந்தது.

இந்நிலையில், ஒடிசா மாநிலம் பாலசோரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘‘பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாகவே கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறியுள்ளார். கடந்த அக்டோபர் 20ம் தேதி பிரதமர் மோடி பேசும்போதும் இதை உறுதிப்படுத்தியுள்ளார். எனவே இந்த சர்ச்சை தேவையற்றது. தடுப்பூசி தயாரிப்பில் இந்திய விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பணிகள் நிறைவு பெற்றவுடன் அனைவருக்கும் வழங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு வகுத்து வைத்துள்ளது. நாட்டின் ஒவ்வோர் குடிமகனுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாகவே வழங்கப்படும். இதற்காக தலா ஒருவருக்கு ரூ.500 செலவிடப்பட உள்ளது’’ என்றார்.

Related Stories:

>