உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் பயிர் கழிவுகள் எரிப்பது குறித்து விரிவான சட்டம் இயற்றப்படும்

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரிக்க காரணமான பயிர் கழிவு எரிப்பது குறித்து விரிவான சட்டம் இயற்றப்படும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் விவசாய நிலங்களில் பயிர் கழிவுகளை எரிப்பதால்தான் காற்று மாசு அதிகமாகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுப் பெற்ற நீதிபதி மதன் பி லோகூரை நியமித்து கடந்த 16ம் தேதி உத்தரவிட்டிருந்தது.  

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபன்னா மற்றும் ராமசுப்ரமணியன் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா,”டெல்லியில் பயிர் கழிவு எரிப்பால் தான் கடுமையான காற்று மாசு அதிகமாகிறதா என்பது குறித்தும், அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அதனை சிறந்த முறையில் கண்காணித்து கட்டுப்படுத்த விரிவான சட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வரவுள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் தனிநபர் குழு தேவையில்லை’’ என வாதிட்டார். இதைக் கேட்ட நீதிபதிகள் வழக்கை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்து, காற்று மாசு தொடர்பான வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்கப்படும் என தெரிவித்தனர். அன்றைய தினம் காற்று மாசு காரணத்திற்கான முழு விவரங்களையும் ஓய்வு நீதிபதி மதன் பி லோகூரின் தனிநபர் குழு விரிவான அறிக்கையாக தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: