மெகபூபா பேச்சுக்கு எதிர்ப்பு 3 மூத்த தலைவர்கள் விலகல்: பிடிபி கட்சிக்கு முற்றுகிறது நெருக்கடி

ஸ்ரீநகர்: காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பேச்சு தங்களின் தேசப்பற்று உணர்வை காயப்படுத்தியதாக கூறி, அவரது பிடிபி கட்சியில் இருந்து 3 தலைவர்கள் விலகி உள்ளனர். இதற்கிடையே தேசிய கொடியுடன் ஸ்ரீநகரில் பாஜ பேரணி நடத்தியது. ஜம்மு காஷ்மீருக்கான கொடி மீண்டும் வரும் வரை காஷ்மீரில் தேசியக்கொடியை உயர்த்தமாட்டோம் என அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சமீபத்தில் கூறியிருந்தார். இது கடும் சர்ச்சையானது. மெகபூபா மீது தேச விரோத சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க பாஜ தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தால் மெகபூபாவுக்கு தனது சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. மெகபூபாவின் பேச்சு தங்களின் தேசப்பற்று உணர்வை காயப்படுத்தி விட்டதாகவும், அவர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டி, மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த டிஎஸ் பாஜ்வா, வேத் மகாஜன் மற்றும் ஹுசைன் ஏ வாபா ஆகிய 3 தலைவர்கள் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளனர். இதற்கிடையே, பாஜ கட்சியினர் தங்கள் எதிர்ப்பை காட்டும் வகையில், மெகபூபா அலுவலகம், வீடு உள்ளிட்ட இடங்களை சுற்றிய பகுதிகளில் தேசிய கொடியை ஏற்ற முயற்சிக்கின்றனர். ஸ்ரீநகரின் முக்கிய இடமான லால் சவுக் மணிக்கூண்டு அருகே தேசிய கொடி ஏற்ற முயன்ற 3 பாஜவினரை போலீசார் பிடித்து சென்று அப்புறப்படுத்தினர்.

மேலும், கடந்த 1947ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் வெற்றிகரமாக இணைந்த நிகழ்ச்சியை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 26ம் தேதி நுழைவு தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று ஜம்மு காஷ்மீரில் நுழைவு தினம் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு திரங்கா பேரணி நடத்தினர். இதில், ஏராளமான வாகனங்களில் பாஜ தொண்டர்கள் மூவர்ண கொடியை ஏந்தியபடி கலந்து கொண்டனர். இந்த பேரணியின்போது தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் வீட்டின் முன் கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: