×

பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்பு இந்தியா-அமெரிக்கா இடையே இன்று 2+2 பேச்சுவார்த்தை

புதுடெல்லி: இன்று நடக்க உள்ள 2+2 பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்பு துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் நேற்று டெல்லி வந்தனர். இந்தியா- அமெரிக்கா இடையேயான வெளியுறவு துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் இடையிலான 2 + 2 பேச்சுவார்த்தையானது கடந்த 2018ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது. மூன்றாவது ஆண்டாக டெல்லியில் இந்தியா-அமெரிக்கா இடையே 2 + 2 பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்பு துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் நேற்று டெல்லி வந்தனர். இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் மைக் பாம்பியோ, மார்க் எஸ்பர் ஆகியோருடன் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் ஆலோசனை நடத்துகின்றனர். பிராந்திய பாதுகாப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த பேச்சுவார்த்தையின்போது இந்திய அமெரிக்க இடையே பாதுகாப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் இருநாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அடிப்படை பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் இறுதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரு நாடுகளுக்கு இடையே உயர் ராணுவ தொழில்நுட்பம், தளவாடங்கள் மற்றும் புவியியல் வரைபடங்களை பகிர்வதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படலாம், இந்தோ-சீனா கடல் பரப்பில் சீனாவின் ஆதிக்கம் மற்றும் பல்வேறு பிராந்திய பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

* ராஜ்நாத்-எஸ்பர் சந்திப்பு
இந்தியா வந்துள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் மார்க் எஸ்பருக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனாதிபதி மாளிகையில் நேற்று சிறப்பான வரவேற்பு அளித்தார். இதனை தொடர்ந்து அமெரிக்கா, இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர்கள் மார்க் எஸ்பர் மற்றும் ராஜ்நாத் சிங் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் இரு நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இருநாடுகளுக்கு இடையே ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

* முக்கியத்துவம் வாய்ந்தது
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு உறவானது தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடியை அமெரிக்க அமைச்சர்கள் சந்தித்து பேச உள்ளனர்.  
எல்லையில் இந்தியா- சீனா இடையே மோதல் போக்கு மற்றும் வருகிற 3ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நடைபெறும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. கடந்த 2018ம் ஆண்டு 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தை டெல்லியில் செப்டம்பர் 28ம் தேதி நடைபெற்றது. கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை வாஷிங்டன்னில் டிசம்பரில் நடந்தது.

Tags : talks ,India ,Ministers of Defense ,United States , 2 + 2 talks between India and the United States today with the participation of the Ministers of Defense and Foreign Affairs
× RELATED அரையிறுதியில் இந்தியா ஏமாற்றம்