தி.நகரில் ரூ.4 கோடி நகை கொள்ளையடித்தவன் திருவள்ளூரில் காதலியுடன் இருந்தபோது கைது:* 7 கிலோ வெள்ளி மட்டும் பறிமுதல்; தங்க நகைகள் குறித்து தனிப்படை தீவிர விசாரணை

சென்னை: தி.நகரில் ரூ.4 கோடி மதிப்புள்ள 4.5 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் 15 கிலோ வெள்ளி கட்டிகள் கொள்ளையடித்த வழக்கில், திருவள்ளூரில் பதுங்கி இருந்த பிரபல கொள்ளையனை காதலியுடன் தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னை தி.நகர் மூசா தெருவில் உள்ள ராஜேந்திர பாபு என்பவருக்கு சொந்தமான உத்தம் ஜூவல்லரியின் மொத்த விற்பனை கடையில் கடந்த 22ம் தேதி மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து 2 கிலோ தங்க நகைகள், 2 கிலோ 125 கிராம் தங்கம் கலந்த வைர நகைகள், அரை கிலோ தங்க கட்டி மற்றும் 15 கிலோ வெள்ளி நகை மற்றும் கட்டிகள் என மொத்தம் 20 கிலோ கொள்ளையடித்து ெசன்றார்.

இதுகுறித்து மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி 5 தனிப்படை அமைக்கப்பட்டு நகைக்கடையில் பதிவான 45 நிமிடம் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர். கொள்ளை சம்பவம் அன்று நள்ளிரவு நகைக்கடை அமைந்துள்ள பகுதியில் பதிவான செல்போன் உரையாடல்களை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தினர். அதில், ஒரு குறிப்பட்ட செல்போன் எண்ணில் இருந்து அடிக்கடி அழைப்புகள் வந்தது தெரியவந்தது. அந்த எண் திருவள்ளூரை சேர்ந்த கார்த்திக் என்பவரின் செல்போன் நம்பர் என தெரியவந்தது.

அதை தொடர்ந்து உதவி கமிஷனர் மகிமைவீரன் தலைமையிலான தனிப்படை போலீசார் திருவள்ளூரில் கார்த்திக் வசித்து வந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது செல்போன் பயன்படுத்திய கார்த்திக் மாயமாகி இருந்தார். பிறகு கார்த்திக்கிடம் செல்போனில் அடிக்கடி பேசிய அவரது காதலியான உமா மகேஸ்வரியை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், தலைமறைவாக உள்ள கார்த்திக் தனது நண்பரான கோடம்பாக்கம் காமராஜ் நகரை சேர்ந்த சுரேஷ்(எ)மார்க்கெட் சுரேஷ் உடன் வெளியே சென்று வருவதாக கடந்த 21ம் தேதி இரவு சென்றவர் வீடு திரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அதைதொடர்ந்து தனிப்படையினர் கோடம்பாக்கத்தில் உள்ள சுரேஷ் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் மாயமாகி இருந்தார். அவரது பின்னணி குறித்து விசாரணை நடத்தியபோது சுரேஷ் பிரபல கொள்ளையன் என தெரியவந்தது. பின்னர் தனிப்படை நடத்திய புலன் விசாரணை மற்றும் சிசிடிவி பதிவுகளில் கிடைத்த புகைப்படங்களை வைத்து தி.நகரில் உள்ள ராஜேந்திர பாபுவின் நகைக்கடையில் கொள்ளையடித்தது சுரேஷ்தான் என்று உறுதி செய்தனர். இருவரும் திருட்டு வழக்கில் சிறையில் இருந்தபோது பழக்கமானதும், பிறகு வெளியே வந்த இருவரும் சேர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் உறுதியானது.

தலைமறைவாக உள்ள கார்த்திக் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதை தொடர்ந்து நகைகளுடன் தலைமறைவாக உள்ள பிரபல கொள்ளையன் சுரேஷ்(எ) மார்க்கெட் சுரேஷ் மற்றும் அவனது கூட்டாளியான கார்த்திக்கை செல்போன் சிக்னல் உதவியுடன் தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர். 4 நாட்கள் தேடுதல் வேட்டையில் முக்கிய குற்றவாளியான சுரேஷ் திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு தனிப்படையினர் கைது செய்தனர்.

பின்னர் கடம்பத்தூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவன் அளித்த தகவலின் படி மறைத்து வைத்திருந்த 7 கிலோ வெள்ளி கட்டிகள் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. மீதமுள்ள 4.5 கிலோ தங்கம் மற்றும் தங்கம் கலந்த வைர நகைகள் குறித்து தனிப்படையினர் கொள்ளையன் சுரேஷ் மற்றும் போலீசாருக்கு துப்பு கொடுத்த கார்த்திக்கின் காதலியை தனிப்படை போலீசார் ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையன் அளித்த தகவலின் படி மறைத்து வைத்திருந்த 7 கிலோ வெள்ளி கட்டிகள் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: