கோவை மாநகரில் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு போஸ்டரை கிழித்த திமுக நிர்வாகிகள் மீது வழக்கு: உதயநிதி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்

கோவை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து கோவையில் ஒட்டப்பட்டிருந்த அவதூறு போஸ்டரை கிழித்த திமுக நிர்வாகிகள் 12 பேர் மீது கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை செல்வபுரம், குனியமுத்தூர், காந்திபுரம், பீளமேடு, ஆர்.எஸ்.புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இதில் பொதுச்செயலாளர் துரைமுருகன், இளைஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரின் படங்களும் கேலியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதைப்பார்த்த திமுக நிர்வாகிகள் அந்த போஸ்டர்களை கிழித்து எறிந்தனர்.

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் போஸ்டர்களை திமுகவினர் கிழித்ததாக அதிமுகவினர் அளித்த புகாரின்பேரில் பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் நாகராஜ், துணை அமைப்பாளர்கள் சதாம் உசேன், சூர்யா, கேபிள் மணி உட்பட 12 பேர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் அவதூறு போஸ்டர் விவகாரம் அறிந்த திமுகவினர் குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இதையடுத்து போலீசார் பிடித்து சென்ற 12 பேரையும் விடுவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, கோவை மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் சி.ஆர்.ராமச்சந்திரன்,(வடக்கு), கார்த்திக் எம்எல்ஏ (கிழக்கு), பையா கவுண்டர் (மாநகர் மேற்கு), மருதமலை சேனாதிபதி (கிழக்கு), தென்றல் செல்வராஜ் (தெற்கு) ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், இன்று காலை 9 மணிக்கு கோவை குனியமுத்தூரில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என தெரிவித்துள்ளனர். ராமநாதபுரத்தில் மறியல்: ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்யக்கோரி நகர் செயலாளர் கார்மேகம் தலைமையில் புதிய பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் நடந்தது.

Related Stories: