பள்ளிப்பட்டில் தனியார் லாட்ஜில் பதுக்கிய ஐம்பொன் சிலைகள் மீட்பு: 3 பேர் கைது

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டில் தனியார் விடுதியில் சிலர் சிலைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கு கிடைத்த தகவலின்பேரில் ஆர்.கே.பேட்டை காவல் ஆய்வாளர் சுரேந்திரகுமார் தலைமையில் போலீசார் அந்த லாட்ஜில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு அறையில் பதுங்கியிருந்த ஐந்து பேரில் இருவர் தப்பிய நிலையில் 3 பேர் மட்டும் போலீசாரிடம் பிடிபட்டனர். அந்த அறையில் போலீசார் நடத்திய சோதனையில் ஒரு அடி உயரமுள்ள 3 ஐம்பொன் சிலைகள் என்று கூறப்படும் நாகலிங்க, ருத்ர சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் கைப்பற்றி சிலைகள் பதுக்கல் சம்பவத்தில் ஈடுபட்ட தூத்துக்குடியை சேர்ந்த மாடசாமி, கருப்புசாமி, ஆந்திர மாநிலம் புத்தூரை சேர்ந்த முரளி ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அரக்கோணம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவர் ஐம்பொன் சிலைகள் வடிவமைக்க புத்தூரை சேர்ந்த சிற்பி முரளிக்கு பணம் வழங்கி சிலைகள் வடிவமைத்தாகவும் அவற்றை ஆந்திராவிலிருந்து ஆட்டோவில் எடுத்து வந்து பள்ளிப்பட்டில் விடுதியில் வைத்து தூத்துக்குடியை சேர்ந்த மாடசாமி, கருப்புசாமிக்கு விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன்  சிலைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஐம்பொன் சிலைகள் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை முடக்கி விட்டுள்ளனர்.

Related Stories: