நாளை மறுநாள் காவிரி ஆணையக் கூட்டம் ஒழுங்காற்று குழு இன்று கூடுகிறது

புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இரு மாதங்களுக்கு பிறகு வீடியோ கான்பரன்ஸ் மூலம் கடந்த செப்டம்பர் 25ம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பிரதிநிதிகள் அணை பாதுகாப்பு, நீர் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை நடத்தினார்கள். இந்த நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணைத்தின் அடுத்த கூட்டம் நாளை மறு நாள் (29ம் தேதி) அதன் தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் முக்கியமாக மேகதாது விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் விதமாக கர்நாடகா செயல்பட்டு வருவது குறித்தும், அதேப்போன்று மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடகா அரசு கூட்டத்தின் போது விவாதிக்க நேரிட்டால் தமிழக அரசு அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளது.

இதில் காவிரி ஆணையத்தின் கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், ஒழுங்காற்று குழுவின் கூட்டம் அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற உள்ளது. அப்போது அணை பாதுகாப்பு, நீர் புள்ளி விவரங்கள் ஆகியவற்றை தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களும் தாக்கல் செய்ய உள்ளனர். இதையடுத்து கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முடிவுகளும் அறிக்கையாக நாளை மறுநாள் நடைபெற உள்ள ஆணைய கூட்டத்தின் போது தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட உள்ளது.

Related Stories:

>