×

எதிர்முனையில் டோனி; தீப்பொறி பறக்கவிட்ட ருதுராஜ்

துபாய்: ‘இளைஞர்களிடம் தீப்பொறி இல்லை’ என்று சொன்ன டோனி எதிர்முனையில் நிற்க, ருதுராஜ் தனது ஆட்டத்தில் தீப்பொறிகளை பறக்கவிட்டார். துபாயில் நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் களம் கண்டது பெங்களூர். அந்த அணி 20ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 145ரன் எடுத்தது. கோஹ்லி50, டி வில்லியர்ஸ் 39ரன் எடுத்தனர். சென்னை தரப்பில் சாம் கரன் 3, சாஹர் 2, மிட்செல் சான்ட்னர் ஒரு விக்கெட் எடுத்தனர். அடுத்து விளையாடிய சென்னை 18.4ஓவரில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 150ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதற்கு முக்கிய காரணம் தொடக்க ஆட்டக்காராக களம் கண்ட ருதுராஜ் கெய்க்வாட். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 51 பந்துகளில் 4பவுண்டரி, 3சிக்சர் உட்பட 65*ரன் விளாசினார்.

அதிலும் இளைஞர்களிடம் தீப்பொறி இல்லை என்று சொன்ன டோனியை எதிர்முனையில் வைத்துக் கொண்டு பவுண்டரி, சிக்சர் விளாசிய போதெல்லாம் ஆட்டத்தில் தீப்பொறி பறந்தது. அம்பாதி ராயுடுவின் 39, பாப் டு பிளஸ்ஸி 25ரன்னும் வெற்றிக்கு காரணம். பெங்களூர் தரப்பில் மோரிஸ், சாஹல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட கெய்க்வாட், ‘இந்த முடிவு நன்றாக இருக்கிறது. எப்போதும் அணி வெற்றி பெறுவதுதான் முக்கியமான விஷயம். இன்னொன்று கடைசி வரை ஆட்டமிழக்கமல் இருப்பது. கொரானா தொற்று காரணமாக நீண்ட நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டது எனக்கு கடினமாக இருந்தது. அணியில் எல்லோரிடமிருந்தும் எனக்கு ஆதரவு கிடைத்தது.

எங்காவது ஒரு பக்கத்தில் திறக்கும் என்பதை உணர்ந்திருந்தேன். மெதுவாக வந்த பந்துகளுக்கு இடையில் வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டி இருந்தது. அதே நேரத்தில் எந்த பந்துவீச்சாளர்களின் பந்தை அடிக்க வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்’ என்றார். கூடவே கேப்டன் டோனி, ‘திட்டமிட்டபடி எல்லாம் நடந்தது. இதுதான் சரியான விளையாட்டு. சுழற்பந்து வீச்சாளர்கள் சரியாக செயல்பட்டனர். கெய்க்வாட் நன்றாக விளையாடினார். இளைஞர்கள் பதிலளித்த விதம் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கூறினார்.

Tags : Tony ,Rudraj , Tony on the opposite end; Rudraj who sparked the fly
× RELATED தீபாவளி கொண்டாட்டம் முடிந்த நிலையில்,...