×

ஐபிஎல் தொடர் பிளேஆப் தேதிகள் அறிவிப்பு

அபுதாபி: நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தகுதிச்சுற்று போட்டியான  பிளேஆப் சுற்றுப் போட்டிகள் நடைபெறும் தேதிகள், களங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பீதி காரணமாக தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. செப்.19ம் தேதி தொடங்கிய 56 லீக் போட்டிகள் நவ.3ம் தேதி முடிகின்றன. இறுதிப்போட்டி நவ.10ம் தேதி நடக்கும். போட்டி தொடங்கியபோது லீக் மற்றும், இறுதிப்போட்டிக்கான தேதிகள் மட்டும் அறிவிக்கப்பட்டன. பிளேஆப் நடக்கும் தேதிகள், களங்கள் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் பிளேஆப் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மோதும் ‘ தகுதிச் சுற்றுப்போட்டி-1’  நவ.5ம் தேதி துபாயில் நடக்கும். அதேபோல் 3வது,4வது இடங்களை பிடித்த அணிகளுக்கான ‘வெளியேற்றும் சுற்றுப் போட்டி’ நவ.6ம்தேதி அபுதாபியில் நடைபெறும். முதல் தகுதிச் சுற்று போட்டியில் தோற்ற, வெளியேற்றும் சுற்றில் வெற்றிப் பெற்ற அணிகள் மோதும் ‘தகுதிச் சுற்றுப்போட்டி-2’ அபுதாபியில் நடக்க உள்ளது. தகுதிச்சுற்றுப் போட்டி 1, 2ல் வெற்றி பெற்ற அணிகள் மோதும் இறுதிப் போட்டி ஏற்கனவே திட்டமிட்டபடி நவ.10ம் தேதி துபாயில் நடைபெறும்.

* பெண்கள் டி20
ஐபிஎல் போட்டிகளுக்கு இடையே, நவ.4 முதல் நவ.9வரை பெண்களுக்கான ‘டி20 சேலஞ்ச் 2020’ தொடர் நடக்கும். இதில் வெலாசிட்டி, டிரையல்பிளேசர்ஸ், சூப்பர் நோவா என 3 பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன. நவ.4, 7 தேதிகளில் இரவு 7.30 மணிக்கும், நவ.5ம் தேதி மாலை 3.30 மணிக்கும் லீக் போட்டிகள் தொடங்கும். இறுதிப்போட்டி நவ.9ம்தேதி இரவு 7.30மணிக்கு ஆரம்பிக்கும். இந்த போட்டிகள் அனைத்தும் ஷார்ஜாவில் மட்டும் நடைபெறும்.

Tags : IPL , IPL Series Playoff Dates Announcement
× RELATED ஐபிஎல் 14வது சீசனுக்கு தயாராக `ஜிம்’ சென்றார் தோனி