நீரவ் மோடி ஜாமீன் மனு 7வது முறையாக நிராகரிப்பு: லண்டன் நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: கடன் மோசடி வழக்கில் தொடர்புடைய நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம் ஏழாவது முறையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் மோசடியில் ஈடுபட்டு, நாட்டை விட்டு தப்பியோடிய நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலமாக அவர் சவுத்-வெஸ்ட் சிறையில் இருந்து நேரில் ஆஜராகி வருகிறார்.

இந்நிலையில், நேற்று அவர் ஜாமீன் கோரிய மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தியாவில் அரசியல் தலையீட்டினால், நியாயமான விசாரணை நடைபெறாது. இந்திய சிறைகளில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததால், அவர் தற்கொலை செய்து கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது, என அவரது வக்கீல் தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிமன்றம், அவரது ஜாமீன் மனுவை நிராகரித்தது. இத்துடன் நீரவ் மோடியின் ஜாமீன் மனு 7வது முறையாக மறுக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்ட நீதிபதி, அவரது காவலையும் அது வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.

Related Stories: