×

தொடர்ந்து காணப்படும் ஏற்ற இறக்கம்: தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

மும்பை: முதலீடு என்று நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் விஷயங்களில் நிலம், வீடு, தங்கம் என்றுதான் பட்டியல் ஆரம்பிக்கும். இதில் நிலம், வீடு ஆகியவை நீண்ட கால திட்டமிடலுக்கு பிறகே சாத்தியமாகும். ஆனால் தங்கம் அப்படியல்ல… நடுத்தர குடும்பத்தினர் கூட, தங்கள் சேமிப்பில் இருந்து முடிந்த வரை ஒரு கிராம் அரை கிராம் என்று கூட தங்கத்தை வாங்கி விடுகின்றனர்.  ஏனெனில், இந்தியர்கள் வாழ்வுடன் பின்னி பிணைந்திருப்பது தங்கம். குழந்தை பிறந்தது முதல் வாழ்வின் அனைத்து முக்கிய கட்டங்களிலும் தங்கத்தின் முக்கியத்துவம் இருக்கிறது. இந்தியர்கள் தங்கத்தை ஆபரண பொருளாக மட்டும் பார்ப்பதில்லை… சென்டிமென்டாக பார்க்கின்றனர். அதனால்தான் விலை உயர்ந்தாலும், நகை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.  அந்த அளவுக்கு இந்தியர்களை தங்கம் மோகம் ஆட்டிப்படைக்கிறது.

 உலக அளவில் தங்கம் கொள்முதலில் இந்தியாவும், சீனாவும் முன்னணியில் உள்ளன. தங்கம் இறக்குமதி அதிகரிப்பதால் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் தங்கம் இறக்குமதியை குறைத்து தங்க மோகத்தை குறைக்கும் வகையில் தங்கத்தை முதலீடாகவும் மட்டுமின்றி, அதை பணத்துக்கு ஈடாக டெபாசிட் செய்ய உரியதாகவும் ஆக்கும் வகையில் தங்க பத்திரம் மற்றும் தங்கம் டெபாசிட் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. தங்க டெபாசிட் திட்டம் வீடு, கோயில்கள் உட்பட பல அமைப்புகளில் முடங்கியுள்ள தங்கத்தை வெளிக்கொண்டு வரவும், அதை நாட்டு நிதிநிலையை வலுப்படுத்தவும் பயன்படுத்த கூடிய திட்டம்.

 தங்கத்தில் முதலீடு நல்லதுதான் என்றாலும், விலையில் திடீர் ஏற்ற இறக்கங்கள் மக்களை தடுமாறவே செய்கின்றன. ஒரு பக்கம் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன. இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தாலும் தங்கத்தின் அதிகரித்து விடும். இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தால் கூட இந்தியர்களுக்கு இந்த பலன் கிடைப்பதில்லை.  எனவே இதையெல்லாம் யோசித்துதான் தங்கத்தில் முதலீடு செய்வதை முடிவு செய்ய வேண்டும். பெண் திருமணத்துக்கு வேண்டும், அவசர தேவைக்கு உதவும் என்றெல்லாம் நினைப்பவர்கள் கவலையே படாமல் குண்டுமணி தங்கம் வாங்கினாலும் எதிர்காலத்தில் கைகொடுக்கும் என்பதில் ஐயமில்லை. உலகில் அதிக தங்கம் கையிருப்பு வைத்திருப்பது அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கிதான்.

 விலை நிர்ணயம் எப்படி?
தங்கத்தின் விலை லண்டன் உலோக சந்தையில் நிர்ணயிக்கப்படுகிறது. லண்டன் கரன்சி பவுன்ட். ஆனாலும், அமெரிக்க டாலரில்தான் விலை நிர்ணயம் செய்கிறார்கள். தேவை மற்றும் இருப்பு அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுகிறது. ஒரு டிராய் அவுன்ஸ் எடையில் விலை இறுதி செய்யப்படுகிறது. ஒரு டிராய் அவுன்ஸ் என்பது 31.1034768 கிராம். லண்டன் புல்லியன் சந்தை கூட்டமைப்பில் தினமும் இரண்டு முறை விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த 1919ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி துவங்கிய இந்த நிலை நிர்ணயம் இன்று வரை தொடர்கிறது. 1968 வரை லண்டன் நேரப்படி காலை 11 மணிக்கு மட்டும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு மதியம் 3 மணிக்கு ஒருமுறையும் இறுதி செய்யப்பட்டு, தினமும் 2 முறை முடிவு செய்கின்றனர். இதில் டட்ச் வங்கி, எச்எஸ்பிசி வங்கி உட்பட 5 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் சுமார் 1,900 டாலராக உள்ளது.


Tags : Continuing Fluctuation: Can I Invest in Gold?
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின்...