×

முதல்வருடன் பொதுமக்கள் திடீர் வாக்குவாதம்: கல்லறை தோட்ட சீரமைப்பில் பாகுபாடு என புகார்

புதுச்சேரி: புதுச்சேரி, நெல்லித்தோப்பில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்துக்கு சொந்தமான கல்லறை தோட்டம் ஜீவானந்தம் அரசு பள்ளி எதிரே உள்ளது. இங்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்யப்படாமல் இருந்தது. இதையடுத்து எம்எல்ஏ மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.24.23 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக பணிகள் நடந்தது. சிமெண்ட் சாலை அமைத்தல், கழிப்பறை, தண்ணீர் தொட்டி, மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட வசதிகள் செய்து பணிகள் முடிவடைந்தது. இதனை மக்களின் பயன்பாட்டிற்கு முதல்வர் நாராயணசாமி நேற்று அர்ப்பணித்தார்.

டெல்லி பிரதிநிதி ஜான்குமார்,  நகராட்சி அதிகாரிகள் மற்றும் பங்குதந்தை வின்சென்ட், பங்கு பேரவையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கல்லறை தோட்டத்தின் ஒரு பகுதியை மட்டும் சீரமைத்து விட்டு மற்றொரு பகுதியில் பணிகள் துவங்கவில்லை. கிறிஸ்தவர்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் இந்த திறப்பு விழா அமைந்துள்ளதாக கூறி கண்டனம் எழுந்தது. திறப்பு விழாவை முடித்த முதல்வர்  நாராயணசாமி, ஜான்குமார் எம்எல்ஏ, பங்குதந்தை வின்சென்ட் மற்றும் அதிகாரிகள்  மற்றொரு பகுதியை பார்வையிட்டு பணிகளை துவங்குவது குறித்து ஆலோசிக்க  வந்தனர்.

அங்கிருந்த 10க்கும் மேற்பட்டோர் முதல்வரை சூழ்ந்து கொண்டு, ஏன் மற்றொரு பகுதி சீரமைக்கப்படவில்லையென கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.  பின்னர் தொகுதி எம்எல்ஏவும், முதல்வருமான நாராயணசாமி மற்றொரு கல்லறை தோட்டப்பகுதியை பார்வையிட்டு ரூ.39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இப்பணிகளும் உறுதியாக முடித்து தரப்படும் என்றார். அதன்பிறகு முதல்வர் அங்கிருந்து  புறப்பட்டு சென்றார்.


Tags : cemetery garden , Public debate with the Prime Minister: Complaint of discrimination in cemetery garden renovation
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...