×

டெல்லியில் பள்ளிகள் திறக்க இப்போது வாய்ப்பில்லை: முதல்வர் கெஜ்ரிவால் தகவல்

புதுடெல்லி: பள்ளிகளை திறப்பதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்ததை அடுத்து லாக்டவுன் உத்தரவு நாடு முழுவதும் மார்ச் மாதம் அமலானது. அதே மாதம் 16ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்படது. ஏழு மாதங்கள் கடந்தும் பள்ளிகளையோ அல்லது கல்லூரிகளையோ திறப்பது குறித்து இதுவரை மாநில அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. லாக்டவுன் முடிந்து அன்லாக் தளர்வுகள் படிப்படியாக அறிவுத்தும், இதுவரை 5 அன்லாக் அறிவிப்பாகி, பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் தொடங்கியும், பள்ளிகள், கல்லூரிகள் இயக்கம் கேள்விக்குறியாகவே உள்ளது.

இதனிடையே, இறுதி செமஸ்டர் மாணவர்கள் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆல் பாஸ் கல்லூரிகளில் அறிவிக்க துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உத்தரவிட்டார். அது மட்டுமன்றி பள்ளிகளிலும் அதே நடைமுறை கடைபிடிக்கப்பட்டது. கொரோனாவுக்கு முன்பே பிளஸ் 2 மாணவர்கள் ஆண்டுத் தேர்வை முடித்திருந்ததால் அவர்களது தேர்வு முடிவுகள் பின்னர் வெளியானது. ஆனால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை கொரோனா பாதிப்பு காரணமாக நடத்த முடியாத ஆம் ஆத்மி அரசு, அந்த மாணவர்களுக்கும், காலாண்டு, அரையாண்டு மற்றும் பள்ளிக்கு வருகை தந்த நாட்கள் அடிப்படையில் தேர்ச்சியை அறிவித்தது.

மேலும் காலாண்டு தேர்வு நடத்தாமலும், அரையாண்டு தேர்வு நெருங்கியுள்ள நிலையிலும் எல்கேஜி தொடங்கி அனைத்து மாணவர்களுக்கும் தற்போது ஆன்லைன் கல்வி முறை அறிமுகம் ஆகியுள்ளது. அது மட்டுமன்றி பள்ளி, கல்லூரிகள் இந்த மாதம் 31ம் தேதி வரை திறக்கப்படாது என துணை முதல்வர் சிசோடியா திட்டவட்டம் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் கடந்த மாத இறுதியில் அன்லாக் 5.0 அறிவித்த மத்திய அரசு, அதில் 9ம் வகுப்பு தொடங்கி 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை அவர்களது விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரவழைத்து பாடம் கற்பிக்கலாம் என்றும், இதர வகுப்புகள் தொடங்குவது குறித்து அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்யலாம் எனவும் கூறியிருந்தது.

எனவே பள்ளிகள் தொடங்குவது இன்னமும் அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டிருக்க, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என கெஜ்ரிவாலிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவர் கூறுகையில், ‘‘பள்ளிகளை திறக்கும் வாய்ப்பு இப்போதைக்கில்லை’’, எனக் கூறியபடி புறப்பட்டுச் சென்றார். அவரது மேலோட்டமான பதில், அடுத்த மாதமாவது பள்ளிகள் திறக்கப்படுமா எனும் நப்பாசையில் உள்ள பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.



Tags : Schools ,Kejriwal ,Delhi , Schools not likely to open in Delhi now: Chief Minister Kejriwal
× RELATED டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால்...