×

ஆக்கிரமிப்புகளால் தொடரும் அவலம்; சேலத்தில் பலத்த மழை பெய்தும் பாலையாய் கிடக்கும் அணைகள்: தெற்கு பாசன விவசாயிகள் கண்ணீர்

வாழப்பாடி: சேலத்தில் பலத்த மழை பெய்தும்  தெற்கு பாசனப்பகுதிக்கு உட்பட்ட கரியகோயில், ஆணை மடுவு அணைகள் வறண்டு கிடப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. வாழப்பாடியை அடுத்த அருநூற்று மலையில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதியின் குறுக்கே, புழுதிக்குட்டை கிராமத்தில் 67.25 அடி உயரத்தில் ஆணைமடுவு அணை கட்டப்பட்டுள்ளது. 267 மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் 263.86 ஏக்கர் பரப்பளவில் இந்த அணை அமைந்துள்ளது. இந்த அணையால் புழுதிக்குட்டை, குறிச்சி, கோணாம்செட்டியூர், சின்னமநாயக்கன்பாளையம், சந்திரபிள்ளை வலசு, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்து கோம்பை உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் நிலங்கள் வாய்க்கால் பாசன வசதி பெறுகிறது.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே கரிய கோயில் அணை கட்டப்பட்டுள்ளது. 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் இந்த அணை கட்டப்பட்டது. 188.76 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அணையால் பாப்பநாயக்கன்பட்டி, ஏழுப்புளி, பீமன்பாளையம், தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 3,600 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. சேலம் தெற்கு பாசன விவசாயத்திற்கு பெரும் நம்பிக்கை தரும் நீராதாரங்களாக இந்த அணைகள் கட்டப்பட்டது. இதனை நம்பி நெல், பாக்கு, தென்னை, வாழை, வெற்றிலை உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாகவே மழைப் பொழிவு குறைந்து வருவதால் இரு அணைகளும் ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் வறண்டே கிடக்கிறது. ஆனால் தற்போது சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததது. சமீபத்தில் கூட, தமிழகத்தில் அதிகபட்சமாக 9சென்டிமீட்டர் மழை சேலத்தில் பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மைய தகவல்கள் வெளியானது. ஆனாலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசனத்திற்கும், லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவைக்கும் ஆதாரமாக திகழும் இந்த அணைகள், வறண்டு பாலையாய் காட்சியளிப்பது நீர்வள மேம்பாட்டு  ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இந்தியாவின் பாக்கு உற்பத்தியில் 10 சதவீதம் இந்த அணைகளை நம்பியே நடக்கிறது. தமிழகத்தின் பாக்கு உற்பத்தியில் 40 சதவீதம் இங்கு தான் நடக்கிறது.

போதிய நீர்வளம் இல்லாததால் பாக்கு உற்பத்தி  வெகுவாக பாதிக்கப்பட்டது. கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியால் பட்டுப்போன பாக்குமரங்களை விவசாயிகள் வெட்டி அப்புறப்படுத்திய அவலமும் அரங்கேறியது. எனவே இது போன்ற அவலங்களை தடுக்க, அணைகளில் நீர்வரத்திற்கான திட்டங்களையும், நடவடிக்கைகளையும் அதிகாரிகள் துரித கதியில் எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகள் மற்றும் ஒட்டு மொத்த பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது. ‘இதே போல் ஆணை மடுவு அணைக்கு மேட்டூர் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து 9ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது 2500 ஏக்கர் பரப்பளவு உள்ள பனமரத்துப்பட்டி ஏரியில் நீர் தேங்க வைத்து, அதன் மூலம் வெள்ளாள குண்டம் ஏரி, சேத்துக்குட்டை ஏரி, சேசன்சாவடி ஏரி, வாழப்பாடி ஏரி, சடையன் செட்டி ஏரி,

சிங்கிபுரம் ஏரி, சோமம்பட்டி ஏரி, குட்ட கரை ஏரி, அம்மம்பாளையம் ஏரி, உமையாள்புரம் ஏரி, பெத்தநாயக்கன்பாளையம், ஏரி, வழியாக ஆத்துர், தலைவாசல், தத்தாதிரிபுரம், வீரபயங்கரம் ஏரி, குரால்ஏரி, அலம்புலம் ஏரி உள்பட 50க்கும் மேற்பட்ட ஏரிகளை இணைக்கலாம் என்று கூறப்பட்டது. இது வெல்டன் நீர்வீழ்ச்சியை சென்றடைந்தால், அதன் மூலமும்  சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அகிய ஐந்து மாவட்டங்களில்  சுமார் ஒரு கோடி பேருக்கு குடிநீர் ஆதாரமும், லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு எப்போதும் வறட்சி இல்லாத வாழ்வாதாரமும் கிடைக்கும். எனவே அரசு, இதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நீர்வள வல்லுநர்களின் வேண்டுகோளாக உள்ளது.

சில ஆண்டுகளில் முழு கொள்ளளவு
பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் கரிய கோவில் அணை கடந்த1980ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 1982 இல் கட்ட அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 1993இல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது. இந்த அணை 1997, 1998, 2005, 2007,  2008, 2009, 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்வாதாரத்தை இழந்து வருகிறோம்
பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரி மாது கூறுகையில்,‘‘சில மாதங்களாக அணைகளின் சுற்றுப்பகுதியில் நல்லமழை பெய்து வருகிறது. ஆனால் விவசாயிகளுக்கு இந்த அணைகளால் பயன்பெறுவற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போனது.குறிப்பாக கரிய கோயில் அணை இருக்கும், பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சி முழுவதும் மலைபிரதேச பகுதியாக உள்ளது. இங்கு வசிப்பவர்கள் அனைவரும் பழங்குடியின மக்களாக உள்ளனர்.மழை பெய்தும் அணையும், அதன் சுற்றுப்புறங்களும் பாலையாய் கிடப்பது வேதனை அளிக்கிறது.கல்வராயன் மலை வனப்பகுதியில் உள்ள வன உயிரினங்கள் அழிந்துவருகின்றன. விவசாயம் சார்ந்த அனைத்து பயிர்களையும் முறையாக பராமரிக்க முடியாமல்,  தற்போது வாழ்வாதாரத்தை மெல்ல,மெல்ல இழந்து வருகிறோம்,’’ என்றார்.

புதியநீர் திட்டங்கள் உடனடியாக அவசியம்
புழுதிக்குட்டை விவசாயிகள் சங்க நிர்வாகி வெங்கடாசலம் கூறுகையில், ‘ஆணை மடுவு அணை, கடந்த சில ஆண்டுகளாக வறண்ட நிலையிலேயே இருந்து வருகிறது. தற்போது சுற்றுப்பகுதியில் பெய்த மழை காரணமாக கொஞ்சம் தண்ணீர் தேங்கி வருகிறது. ஆனாலும் அது, விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. எனவே அரசு தனியாக கவனம் செலுத்தி மேட்டூர் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தி இந்த அணையில் எப்பொழுதும் தண்ணீர் தேங்க ஏற்பாடு செய்ய வேண்டும். போதிய நீராதாரம் இல்லாததால் பல லட்சம் ஏக்கரில் பாக்கு, தென்னை விவசாயம் அழிந்து வருகிறது. எனவே இந்த அவலத்தை மாற்ற துரித கதியில் நடவடிக்கைகள் எடுப்பது மிகவும் அவசியம். இதே போல் அணையின் சுற்றுப்புறங்களில் உள்ள காடுகளில் வாழும் உயிரினங்கள் அழிந்து வரும் நிலையும் தொடர்கிறது. எனவே ஒகேனக்கல் வழியாகவோ அல்லது மேட்டூர் வழியாகவோ புதிய நீர் திட்டத்தை கொண்டு வர வேண்டும்,’’ என்றார்.

குடிநீருக்கே  திண்டாட்டம்
ஊர்க்கவுண்டரும், மூத்த விவசாயியுமான ஜெயராமன் கூறுகையில்,‘‘கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆற்றில் மட்டுமே தண்ணீர் செல்கிறது. விளைநிலங்கள் இருக்கும் பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால் அணைகள் வறண்டு போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த அணைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு தற்போது திண்டாடும் சூழ்நிலையில் மக்கள் உள்ளனர். வாய்க்கால் பகுதிகள் அனைத்தும் முட்புதர்கள் மண்டி தூர்வாரப்படாமல் கிடைக்கிறது. இதுவே மழை பெய்தும் அணைகளுக்கு தண்ணீர் வந்து சேராததற்கான முக்கிய காரணம். ஆனாலும் மக்களை பொறுத்தவரை தண்ணீரை விட, விவசாயத்திற்கான நீர்வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர். எனவே இந்த அணைகளுக்கு எப்படி நீரை தேக்கலாம் என்று திட்டமிட்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக புதர்மண்டிக்கிடக்கும் நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்,’’ என்றார்.


Tags : Salem ,Dams ,Southern Irrigation Farmers , The continuing disgrace of aggression; Dams in Salem with heavy rains: Southern Irrigation Farmers in tears
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...